Thursday, July 19, 2012

படையினருக்கு பயிற்சியளிப்பதில் இந்தியாவே இலங்கையின் பிரதான பங்காளி:

படையினருக்கு பயற்சியளிப்பதில் இலங்கையின் பிரதான பங்காளியாக இந்தியாவே காணப்படுகின்றது என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

'1000, 1500 பேருக்கு பயிற்சியளிக்கும் இந்தியாவுக்கு 8 பேர் என்ற விடயம் பாரிய பிரச்சினையாகத் தோன்றாது. இதனையொரு பிரச்சினையாக கருதாத பட்சத்திலேயே இலங்கை விமானப்படையினர் 8 பேருக்கும் வேறு இடத்தில் பயிற்சியளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலைமையாகும்.

இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குழவினரே குரலெழுப்பி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இந்திர அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்திலேயே அது குறித்து இலங்கை கவலைப்படவோ அல்லது எதிரான நடவடிக்கைகளையோ முன்னெடுக்க வேண்டிய தேவையோ ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவின் ஒரு பிராந்தியமாக விளங்கும் தமிழ்நாட்டில், அரசியல் தேவைக்காகவே இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் அதற்கு இந்திய அரசு ஆதரவு வழங்குவதில்லை.

அதற்கு சிறந்த உதாரணங்களாக புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு நீடித்துள்ளமை மற்றும் தனிஈழம் கோரும் மாநாடு தொடர்பில் இந்திய அரசு கருணாநிதியை கண்டித்துள்ளமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமான முறையில் செயற்பட்டு வருகின்றது. இந்த உறவுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளிலேயே சில குழுவினர் செயற்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com