Saturday, July 28, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: முந்துகிறார் ஒபாமா!

நவம்பர் 6 ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசு தேர்தலில், ஒபாமா முன்னிலையில் இருப்பதாக சி.என்.என் கணிப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கேற்ப குடியரசுத்தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 55 வாக்குகளைக் கொண்ட கலிஃபோர்னியா மாநிலம் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய பலம். அடுத்த பெரிய மாநிலமாக 38 வாக்குகள் உள்ள டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் கோட்டையாகும். இதற்கு முன் குடியரசுத் தலைவர்களாக இருந்த சீனியர் மற்றும் ஜூனியர் புஷ் இருவரும் டெக்சாஸ் மாநிலத்தை சார்த்தவர்கள் தான். ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்த வாக்குகள் 538 ஆகும்.

கலிஃபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், மினசோட்டா, இலனாய், நியூயார்க், மெய்ன், மசசூசட்ஸ், கனெக்டிகட், ரோட் ஐலண்ட், நியூஜெர்சி, மேரிலாண்ட், ஹவாய் ஆகிய மாநிலங்களில் நிச்சயமான ஆதரவும், நியூமெக்சிகோ, விஸ்கான்ஸின், மிஷிகன் மாநிலங்களில் ஆதரவு அலைகளும் வீசுவதால் 247 வாக்குகள் என்ற நிலையில் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார்.

தீவிர குடியரசுக் கட்சி மாநிலங்களான டெக்சாஸ் உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் ஆதரவு அலை வீசும் அரிசோனா, மிசோரி, இண்டியானா, வடக்கு கரோலினா ஆகிய மாநிலங்களையும் சேர்த்து, ஒபாமாவை எதிர்த்து போட்டியிடும் ராம்னிக்கு 206 வாக்குகளே கிடைக்கும் நிலை உள்ளது. ராம்னி ஏற்கனவே கவர்னராக இருந்த மசசூசட்ஸ் மாநிலம் கூட ஒபாமாவுக்கு ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது.

நெவடா, கொலோராடோ, ஐயோவா, ஓஹாயோ, வெர்ஜீனியா, ஃப்ளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய ஏழு மாநிலங்கள் தான் தேர்தல் முடிவை தீர்மானிக்க உள்ளன.
ஃப்ளோரிடாவில் கணிசமான ஸ்பானிஷ் இன மக்கள் உள்ளனர். ஒபாமாவின் சமீபத்திய குடியுரிமை கொள்கை அவர்களை குஷிப்படுத்தியுள்ளது. 2000 ம் வருட தேர்தலில் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் பெற்ற ஃப்ளோரிடா வெற்றி தான் ஜார்ஜ் புஷ்ஷை குடியரசுத் தலைவர் ஆக்கியது. 29 வாக்குகள் கொண்ட ஃப்ளோரிடா, ஓபாமாவுக்கு கைகொடுத்தால் அவர் மீண்டும் குடியரசுத்தலைவர் ஆவது நிச்சயம்.
மீண்டும் வெல்வாரா ஓபாமா என்பது இன்னும் நான்கு மாதங்களில் தெரிந்து விடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com