விஷம் கொடுத்து பாலஸ்தீன தலைவர் அரபாத் கொல்லப்பட்டார்: அல்- ஜெசீரா
பொலோனியம் என்ற கதிரியக்க தனிமம் உணவில் கலக்கப்பட்டு யாசர் அரபாத் கொல்லப்பட்டார் என்று சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி யாசர் அரபாத், பாரீஸ் இராணுவ வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
75 வயதான நிலையில் அரபாத் மரணமடைந்ததால் இது இயற்கையானது என கருதப்பட்டு வந்த நிலையில் அவரது மனைவி சுஹாவிடம் கொடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்தனர்.
சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அவருடைய உணவில் பொலோனியம் என்ற கதிரியக்க தனிமம் கொண்ட விஷம் கலக்கப்பட்டது என அரேபிய ஊடகமான அல்- ஜெசீரா தெரிவித்துள்ளது.
இது குறித்து லாசேன் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் போசட் கூறியதாவது: யாசர் அரபாத்தின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் குறிப்பிடத்தக்க அளவு பொலோனியம் இருந்தது என்றார்.
அரபாத் இறந்தபோது அவரை இஸ்ரேல் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று 2005 ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு: பொலோனியம் என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு இது உடலில் இருந்தால் கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்து விடும்.
மேலும் இந்த கதிரியக்கத் தனிமத்தை சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளிலிருந்துதான் பிரித்தெடுக்க முடியும்.
எனவே இந்த பொலோனியத்தை இஸ்ரேல்தான் அராபத்தின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment