கொரியர்கள் தலையில் தீ வைக்க சொன்ன சுவிஸ் வீரர்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை!
லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தென் கொரிய கால்பந்து அணியினரை, மங்கோலாய்ட்ஸ் (Down's Syndrome பிரச்சனை உள்ளவர்கள்) என்று டுவிட்டர் இணையதளத்தில் விமர்சித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா ஒலிம்பிக் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, உடனடியாக போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் தென் கொரியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு டுவிட்டரில் கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா, தென் கொரியர்களை 'மங்கோலாய்ட்ஸ்' என்று குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், தென் கொரிய மக்கள் அனைவரும் மங்கோலாய்ட்ஸ். அவர்களின் தலைகளில் தீ கூட பற்ற வைக்கலாம் என்று கூறியிருந்தார்.
இதற்கு சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அணியை தலைமையேற்று நடத்தும் ஜியன் கில்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மைக்கேல் மார்கனில்லா டுவிட்டரில் தெரிவித்த கருத்தின் மூலம் தென் கொரிய மக்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து அணியை கேவலப்படுத்தி உள்ளார். இது தண்டனைக்குரிய ஒரு செயலாகும். ஒலிம்பிக் போட்டியின் விதிமுறைகளை மீறி உள்ள மைக்கேலை, சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கி உள்ளோம்.
எங்கள் அணியின் வீரரின் செயலுக்காக, தென் கொரிய ஒலிம்பிக் வாரியம் மற்றும் தென் கொரிய கால்பந்து வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம் மைக்கேல் தனது தவறை உணர்நது கொள்வார் என்று கருதுகிறேன் என்றார்.
பிரென்சு மொழியில் கருத்து வெளியிட்ட மைக்கேல் மார்கனில்லாவின் டுவிட்டர் இணையத்தளத்தில் இருந்து, படங்களை எடுத்த சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனால் அந்த இணையதள முகவரியை மைக்கேல் நீக்கிவிட்டார்.
மேலும் மைக்கேல் மார்கனில்லா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் வாரியம் அளித்த தண்டனையை தான் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மைக்கேல் மார்கனில்லா கூறியதாவது, தென் கொரிய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மேலும் சுவிட்சர்லாந்து அணியினர் மற்றும் கால்பந்து வீரர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்று கொள்கிறேன். தென் கொரியாவிடம் தோல்வி அடைந்ததால், கோபத்தில் நான் பெரிய தவறை செய்துவிட்டேன் என்றார்.
முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட கிரேக்க தத்தி தாண்டுதல் வீரர் வோயுலா பப்பாகிறிஸ்டோ, டுவிட்டர் இணையதளத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டார். இதற்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment