பாக்கிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரியின் பேஸ்புக் வலையில் சிக்கிய இந்திய அதிகாரி.
பேஸ்புக் மூலம் வலைவீசிய பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினட் கேணல் தர அதிகாரி ஒருவர். ராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் கவசப் படைப் பிரிவின் லெப்டினட் கேணலான இவர் அந்தப் பெண்ணுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதை மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ கண்டுபிடித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை எச்சரித்துள்ளது.
இதையடுத்து அந்த லெப்டினட் கேணலிடம் இந்திய ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பயிற்சிக்காக சென்ற இன்னொரு இந்திய ராணுவத்தின் லெப்டினட் கேணலையும் ஒரு பெண் 'வளைத்ததை' ரா உளவுப் பிரிவு கண்டுபிடித்தது. இதையடுத்து அவர் எச்சரிக்கப்பட்டார்.
இந் நிலையில் பேஸ்புக் மூலம் இன்னொரு அதிகாரி தானாகவே போய் ஐஎஸ்ஐ பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார்.
உரிய அனுமதியில்லாமல் இந்திய ராணுவ அதிகாரிகள் வெளிநாட்டினர் யாருடனும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்பது விதியாகும். இதை அந்த லெப்டினட் கேணல் மீறி என்னென்ன தகவலைகளை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து ராணுவ உளவுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்திய ராணுவ அதிகாரிகள் புனைப் பெயரில் தான் இடம் பெறலாம் என்ற விதியும் உள்ளது. தாங்கள் யார் என்பது குறித்தோ, தங்களது பதவி குறித்தோ, இருக்கும் இடம் குறித்தோ சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற தடை உள்ளது.
இதையும் மீறி தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி அந்தப் பெண்ணின் வலையில் வீழ்ந்துள்ளார் இந்த லெப்டினட் கேணல் என இந்திய வட்டாரங்களில் புரளி கிளம்பியுள்ளது.
0 comments :
Post a Comment