Thursday, July 26, 2012

நான் அதிபர் பதவியைத் துறந்து உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். கருணாவின் சகோதரி.

30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் இருந்த சந்தோச நிலையை அடையவேண்டுமாகவிருந்தால் ஆளுங்கட்சியில் இணைந்திருந்தால் தான் எதிர்வரும் காலத்தில் சிறந்த கல்வியை உருவாக்கி சிறந்த பொருளாதார அபிவிருத்தியை காணமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் அக்கட்சியின் வேட்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை,40ஆம் கொலணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான இருமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நான் ஒரு பாடசாலையின் ஆசிரியராக இருந்து பின் அதிபராக கடமை புரிந்திருக்கின்றேன். ஒரு பாடசாலையின் கல்வியை வளர்ப்பது எவ்வளவு கடினமானதென்று எனக்குத் தெரியும்.

ஆரம்பக் கல்விக் குழந்தைகள் சுதந்திரமாக இருந்து எழுத்துகளை உறுப்பமைய எழுதுவதற்கு இடவசதி வேண்டும். மேற்பிரிவு மாணவர்கள் கல்வியை சிறந்த முறையில் கற்பதற்கு அமைதியான தனித்துவமான வகுப்பறைகள் வேண்டும். இந்தப் பாடசாலைக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதென்பது சந்தோஷத்திற்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனையோ பாடசாலைகள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைக்குத்தான் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

கருணா அம்மான் அவர்களின் படுவான்கரை மக்களை கல்வித் தரத்திலும் வாழ்க்கைத்தரத்திலும் உயர்த்த வேண்டும். அவர்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்ற ஒரு உந்துசக்தியின் மூலம் தான் இந்தப் பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த கல்குடாத் தொகுதியில் எத்தனையோ பாடசாலைகளில் மாணவர்கள் மரநிழலில் இருந்து கற்கின்ற நிலை இருக்கின்றது. அவ்வாறிருந்தும் இந்த படுவான்கரை மக்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் குழந்தைகள் எல்லா வகையான கல்விகளையும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று இந்தப் பாடசாலைக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நிதியை பெற்றுக்கொடுத்து ஒரு மாடிக்கட்டிடத்தையும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றார்.

எதிர்வரும் காலத்தில் உங்களுக்கென்று ஒரு தலைவர் அப்போது இருந்தார் இன்றும் இருக்கிறார் இனியும் இருப்பார் என்ற நம்பிக்கை உங்களுக்கு எழ வேண்டும். எங்களுக்காக கருணா அம்மான் இருக்கின்றார் அவரிடம் சென்று எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

எங்களைக் கவனிக்க யாருமில்லை என்று நீங்கள் சோர்ந்து போகக்கூடாது. ஒன்பதாம் மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகவும் முக்கியமாக நான் என்னை அர்ப்பணித்து உங்களுக்காக போட்டியிடுகின்றேன்.ஏனென்றால் பதவிக்காகவோ பணத்திற்காகவோ அல்ல. ஏனென்றால் நான் அதிபர் என்ற சிறந்த தலைமைத்துவப் பதவியில் இருந்தேன். எனக்கு வருவாய் இருக்கின்றது. இருந்தாலும் எனது நோக்கம் இந்த மக்களை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும். அபிவிருத்திக்காக வருகின்ற நிதிகளை சிறந்த முறையில் திட்டமிட்டு அது ஒவ்வொரு கிராமமாக பிரதேசமாக சென்றடைய வேண்டும் என்பதாகும்.

இதற்கு மத்திய அரசில் எமது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பின்பலமாக இருக்கின்றார். அவர் மத்திய அரசில் இருக்கும்போது மாகாண சபையில் அவருடன் ஒத்துழைத்து இருக்கக்கூடிய தன்னம்பிக்கையுடைய ஒருவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவரின் தலைமையின் கீழ் நாங்கள் மூவரும் போட்டியிடுகின்றோம்.

முக்கியமாக நான் எமது பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும் அவர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தையூட்டி தற்துணிவை ஏற்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகத்தான் நான் இன்று களம் இறங்கியிருக்கின்றேன். கணவனை இழந்தாலும் பிள்ளையை இழந்தாலும் கூடுதலான பாதிப்பு ஒரு பெண்ணுக்குத்தான் ஏற்படும். கூடுதலாக அந்த வேதனையை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். வீட்டில் இருந்துகொண்டு கவலைகளையெல்லாம் மனதில் திணித்து வைத்துக்கொண்டு வேதனைகளை அனுபவிப்பவர்கள் முழுமையாக பெண்கள் தான்.

நானும் ஒரு தாய். ஒரு சகோதரியை இழந்திருக்கின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகளை இழந்திருக்கின்றோம் சகோதரர்களை இழந்திருக்கின்றோம் கணவனை இழந்திருக்கின்றோம். இனிவரும் காலத்தில் எங்களது பிள்ளைகள் கல்வித் தரத்திலும் எங்களது கிராமம் மாவட்டம் பொருளாதார அபிவிருத்தியிலும் முன்னேற வேண்டும். முதலாவதாக கல்வியை நாங்கள் வளர்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில் தான் இந்தப் பாடசாலைக்கு முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி அவர்களின் மகிந்த சிந்தனை திட்டத்தின்; வீதிப்புனரமைப்பு நடவடிக்கையின்படி எந்தவொரு கிராமத்திலும் கிரவல் பாதை எதிர்காலத்தில் இருக்கக்கூடாது.

கொங்கிறீட் பாதைகளே இருக்க வேண்டும். பிரதான பாதைகளெல்லாம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. விவசாயத்திற்கான குளங்கள் திருத்தியமைக்கப்பட்டுவருகின்றது. மீன்பிடியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது. கட்டங்கட்டமாக கல்வி அபிவிருத்திக்கான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுவருகின்றது.

ஆகவே சிறந்த நிர்வாகம் மிக்க ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாகும். ஜனாதிபதி எமது மாவட்டத்திற்கு நிறைவான அபிவிருத்திகளை செய்து வருகின்றார். இனியும் செய்வதற்காக பல மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டீருக்கின்றது.

நீங்கள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் எமது குழந்தைகளின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கும் நாங்கள் எங்கு செல்ல வேண்டும் யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் எங்களின் தேவைகளை பெற்றுக்கொள்வது எவ்வாறு என்ற சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

நாங்கள் சிறந்த முறையில் ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்காதுவிட்டால் பொருளாதாரத்தை திட்டமிட்டு செயற்படுத்த முடியாது. நானும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து படுவான்கரைப் பிரதேசத்தை சிறந்த முறையில் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டு வருகின்றோம்.

30வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் நீங்களாக உழைத்தீர்கள் வீடு கட்டினீர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தீர்கள். அந்த நிலை இனிவரும் காலங்களில் வரவேண்டும். தேசத்திற்கு மகுடம் என்ற திட்டத்தின் கீழ் உங்களுக்கு பாரிய நிதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே நீங்கள் அனைவரும் ஆளுங்கட்சியில் இணைந்திருந்தால் தான் எதிர்வரும் காலத்தில் சிறந்த கல்வியை உருவாக்கி சிறந்த பொருளாதார அபிவிருத்தியை காணமுடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com