Sunday, July 29, 2012

வன்னிப் பெருநிலம்: பதற்றமும் நம்பிக்கையின்மையும் - ஸர்மிளா ஸெய்யித்

‘பள்ளிக்கூடத்திலிருந்து வந்த என்னைக் கதறக் கதற இழுத்துக்கொண்டு போச்சினம். கொஞ்சமும் விருப்பமில்லாமல் கொண்டையை வெட்டி எங்கடை கோலத்தையே மாத்திச்சினம். இப்ப எங்கடை வாழ்க்கையே தலைகீழாய்ப் புரட்டிப்போட்டினம். நான் ஓஎல் பரீட்சையில சித்தியடைஞ்ச பிள்ளை. படிச்சிருந்தா எப்படியாச்சும் வாழ்ந்திருக்கலாம்’.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் அறியாத முள்ளிவாய்க்கால் இன்று உலகப் பிரசித்தம் பெற்றதாகிவிட்டது. உலகத்தின் கவனத்தை ஈர்த்ததும் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்விலிருந்து பிரித்து நோக்கவும் முடியாத இடத்தை முள்ளிவாய்க்கால் பெற்றுள்ளது.

இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரக்ஞைகளைப் பல்வேறு காலகட்டங்களாகப் (1983 - 2009) பிரித்து நோக்க முடிந்தபோதும், முக்கியமாகப் போருக்கு முன்னர் - போருக்குப் பின்னர் அல்லது ஜெனீவாப் பிரகடனத்திற்கு முன்னர் - ஜெனீவாப் பிரகடனத்திற்குப் பின்னர் என இருவேறு கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

மே 2009இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதான கொலைக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளன. ஜெனீவா, மனித உரிமைப் பேரவையானது தமிழீழப் போராட்டத்தின் தோற்றுவாயாக அமைந்த இனமுரண்பாடுகளுக்கான, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்துக்கான தீர்வைப் பெற்றுத் தருமென்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது அல்லது வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலைகளில் வன்னிப் பெருநிலப்பகுதிக்குச் சென்றுவரும் எவருக்குமே எழக்கூடுமானதொரு கேள்வி போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவை நீதியா நிவாரணமா என்பதே. போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பல்வேறுபட்ட இழப்புகளுக்கும் மன நெருக்கடிகளுக்கும் ஆளானவர்கள் வடக்கு மக்கள். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக கிடைக்க வேண்டிய நிவாரணங்கள், அடிப்படை உதவிகள்கூட இன்னும் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலேயே குற்றச் செயல்கள் அதிகரித்த நிலப்பரப்பாக வடக்கு மாறிவருவதை அண்மைக் காலச் செய்திகளிலிருந்து அறிகிறோம். போரால் ஏற்பட்ட மன வடுக்களிலிருந்து விடுபடாத நிலையாலும் விரக்தி, வெறுப்பு, வறுமை ஆகிய காரணங்களாலும் இப்பகுதிகளில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

வவுனியா வைத்தியசாலையில் தினமும் சிகிச்சைக்கு வருகிறவர்களில் 27 சதவீதமானவர்கள் போரால் வலுக்குறைவுக்கு ஆளானவர்கள். 14 சதவீதமானவர்கள் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் மனப்பிறழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும்.

குறிப்பாக இப்பகுதிகளில் வாழும் போராளிகளின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. மே 2009இல் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளில் இதுவரை 10,874 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்த போராளிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களில் மாறுபட்டதும் முரண்பாடானதும் சந்தேகமானதுமான நிலையே காணப்படுகிறது. களநிலவரங்களின் அடிப்படையில் சரணடைந்த போராளிகளின் எண்ணிக்கையைவிடவும் சுற்றிவளைப்பின்போது பலவந்தமாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மாற்றுத் தெரிவுக்கு இடமற்ற நிலையில், புலிகளின் அரச உட் கட்டமைப்பில் மாதாந்த, நாளாந்த வருமானத்திற்காகப் பணியாற்றிய சிவிலியன்களும் புலிகளால் பலவந்தமாகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட - பயிற்சியே பெறாத - அப்பாவிகள் பலரும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதாகித் தடுப்புக் காவலில் இருந்து விடுதலைபெற்றவர்கள் வடக்கை மட்டும் சேர்ந்தவர்களல்ல. சரணடைந்த போராளிகளில் 65 சதவீதமானவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. புனர்வாழ்வளிப்பு என்னும் பெயரில் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்படும் போராளிகள் சமூக அங்கீகாரம் இழந்தவர்களாகவும் வாழ்வை நடத்துவதற்கான அடிப்படைக் காரணிகளை இழந்தவர்களாகவும் விரக்தியின் விளிம்பில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வலுக்குறைந்தவர்களாக இருப்பதும் மற்றுமொரு கோணத்தில் வாழ்வின் சவால்களை அதிகப்படுத்தியுள்ளது.

மிக இறுக்கமான விதிகளையும் கட்டுக்கோப்பான நடைமுறைகளையும் கொண்ட புலிகள் உறுப்பினர்களுக்கே உரிய தனித்துவங்களிலிருந்து விடுபட்டுச் சமூக வாழ்வுக்குள் இணைவது அத்தனை எளிதான காரியமல்ல.

யாரை எதிர்கொள்வதாக இருந்தாலும் பதற்றமான நிலை. நம்பிக்கையற்ற சூழ்நிலை. சமூகத்தில் போராளிகளும் போராளிகள் சமூகத்திலுமாக நம்பிக்கையற்ற சந்தேகத்துடனான நோக்குதல்களால் பாரிய சிக்கல்கள் உருவெடுத்துள்ளன.

‘எனக்கென்டா ஒரே வெறுப்பாக் கிடக்குது. எங்கடை சமூகத்தின் விடுதலைக்காகத்தான் போராடினம். இப்ப எங்கடை சமூகமே எங்களை ஏற்கிதில்லை. போராளி என்டாலே முகத்தைத் திருப்புற நிலைதான் இருக்கிது.’

இது பாவாவின் குரல். கொக் கட்டிச் சோலையில் வசிக்கும் 29 வயதான பாவா, 14 வயதுச் சிறுமியாக இருக்கும்போதே புலிகள் இயக்கத்தில் இணைந்துள்ளார்.

‘விரும்பித்தான் போராட்டத்தில் என்னைச் சேர்த்துக்கிட்டேன். இப்ப தான் அது எத்தனை முட்டாள்தனம் என்டு தெரியுது. எதிர்காலம் என்ற ஒரு விடயத்தைப் பற்றிச் சிந்திக்கவே முடியல்ல. பள்ளிக்கூடம் போற வயசில போராட்டத்தில் இணைந்து இப்ப படிப்பும் இல்லை, தொழிலும் இல்லை, நிம்மதியான வாழ்க்கையும் இல்லை’ என மனம் சலிக்கிறார் பாவா.

பாவா மட்டுமல்ல பெண் போராளிகளில் பெரும்பகுதியினர் இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு, கிரானைச் சேர்ந்த சுதா, 27 வயதுப் பெண். ஒரு கையைப் போரில் இழந்தவர். புலிகள் இயக்க உறுப்பினராகச் சரணடைந்து விடுதலை பெற்றுள்ளார்.

‘பள்ளிக்கூடத்திலிருந்து வந்த என்னைக் கதறக் கதற இழுத்துக்கொண்டு போச்சினம். கொஞ்சமும் விருப்பமில்லாமல் கொண்டையை வெட்டி எங்கடை கோலத்தையே மாத்திச்சினம். இப்ப எங்கடை வாழ்க்கையே தலைகீழாய்ப் புரட்டிப்போட்டினம். நான் ஓஎல் பரீட்சையில சித்தியடைஞ்ச பிள்ளை. படிச்சிருந்தா எப்படியாச்சும் வாழ்ந்திருக்கலாம்’.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் சமூக நிலைப்பாட்டில், அணுகு முறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. சமூக வாழ்வின் நீரோட்டத்தில் ஓர் அங்கமாக இணைந்து கொள்வதிலுள்ள சவால்களை அவர்கள் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றனர். பெண் உறுப்பினர்கள் விரக்தி காரணமாக மனநிலை பாதிக்கப்படுகின்றனர். தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர். வறுமை, வாழ்தலுக்கு வழியற்ற நிலையால் விபச்சாரத்திற்கும் தள்ளப்படுகின்றனர். ஆண் உறுப்பினர்கள் போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுகின்றனர்.

இந்நிலைகூட ஆழமான ஜன நாயக அடிப்படை வாழ்தலுடனான உரிமைகளுடன் தொடர்புபட்ட விடயங்களாகவே கணிக்கப்பட வேண்டும்.

மூன்று தசாப்த போரியல் வரலாற்றில் இலங்கை மக்கள் பல்வேறு கொலைக்களங்களைச் சந்தித்தவர்கள். மனித உரிமை மீறல்களை இதயசுத்தியோடு ஆராய்வதெனில் பாதகமான குற்றச் செயல்களைப் புரிந்ததிலும் மனித இனத்திற்கு எதிரான அனைத்துத் தாத்பரியங்களையும் மீறிக் குற்றம் புரிந்ததிலும் புலிகளின் பங்களிப்பு அளப்பரியது என்ற நிலைப்பாட்டை மறுக்கவே முடியாது.

சிறுவர்களைப் போரிட நிர்ப்பந்தித்துப் புலிகள் இயக்கம் மீறிய மனித உரிமை மீறலானது இன்றும் சமூகத்திலிருந்து அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளது. சிறுவர்களின் கல்வி உரிமையை மறுத்தது, பாது காப்பாற்ற சூழலில் உத்தரவாதமற்ற நிலையில் போராடக் கட்டாயப்படுத்தியது போன்ற பல குற்றங்களைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டது உலகறிந்த உண்மை. இந்தக் குற்றங்களை உலகம் இன்று மறந்திருந்தபோதும், அவற்றின் எதிரொலிகளை இன்றும் சமூகத்தில் காண முடிகிறது.

வடக்கில், மன்னார் பகுதியைச் சேர்ந்த சுகிதா 18 வயதுச் சிறுமி. “2008 போர் உக்கிரமாக நடந்த காலத்தில் வீட்டிலிருந்த என்னைப் பலவந்தமாக இழுத்துப் போயினர். 2 நாள்தான் பயிற்சி தந்திச்சினம். எனக்கென்டால் துப்பாக்கியத் தூக்குவதற்கே பயமாக இருந்தது. அதைவிடத் தூக்க முடியாத அளவு பாரமாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தேன். அதைக்கூடப் பொருட்படுத்தாமல் என்னைச் சமருக்கு அனுப்பிச்சினம். போனதுதான் காயத்தோடும் ஒற்றைக் காலோடும் தான் தப்பினேன்.

இன்று ஒற்றைக் காலை இழந்து, செயற்கைக் காலில் நடக்கிறாள் 18 வயது சுகிதா.

இப்படி ஒரு சுகிதா அல்ல. நூற்றுக்கணக்கான சுகிதாக்கள் வாழ்கின்றனர். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் போரால் வலுக்குறைவுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 5,000 ஆக இருக்கலாம். இந்த எண்ணிக்கை அதிகரிக்க இடமுண்டே தவிர, குறைவடையாது. தமிழ் ஈழத்திற்காகப் போராடி எதிர்காலத்தை இழந்து நிற்கும் இவர்களுக்குச் சுபிட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மிகப் பிரதான கடமை என்பதை மறந்த நிலையிலேயே தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் பின்னணிகள் மறைக்கப்பட்டுத் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன என்ற அனுதாப அடிப்படையிலும் அரசியல்சார் இலக்குகளை மையமாகக் கொண்டதுமான வியூகத்துடனுமே நகர்த்தப்படுகின்றன. அபிலாஷைகளினதும் இருப்பின் பேரிலுமாகத் தமிழ் மக்களை உணர்வுபூர்வமாகக் கவரும் முலாம் பூசப்பட்ட அப்பட்டமான அரசியல் கண்ணோட்டங்களுக்கு அப்பால், அறிவுபூர்வமாக மக்களின் சமகாலத் தேவைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தாயகக் கனவை அடைவதை இலக்காகக்கொண்டு போரிட்டு, பின்தள்ளப்பட்டு இன்றும் எம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பல்லாயிரம் உறுப்பினர்களின் எதிர்காலத் தேவைகள், ஜீவனோபாய அம்சங்களில் அக்கறை செலுத்தத் தவறும்பட்சத்தில் வடக்கில் அதிகரித்துவரும் பாரிய குற்றச் செயல்கள், கிழக்கிலும் நாடு பூராவும் பரவக்கூடிய அபாயமுள்ளதுடன், மற்றுமொரு கோணத்தில் புதியதொரு வன்முறைக் கலாசாரம் உருவாகவும் வழி சமைக்கும்.

எத்தகைய சூழலாக இருந்தாலும் போருக்குப் பின்னரான மீள்கட்டமைப்பு மிக இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. மக்களின் இயல்பு வாழ்வும் ஜீவனோபாயத் தேவைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை. யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டபோதிலும், வீதிப் புனரமைப்பு, பிரதான வீதிகளில் வர்த்தக, வங்கிக் கட்டுமானங்கள் தவிர்த்த வேறெந்த சாதாரண மக்களின் நாளாந்த வாழ்வை மேம்படுத்தும் பணிகளையும் காண முடியவில்லை அல்லது மிகக்குறைவாகவே காண முடிகிறது. வடக்கில் கிராமங்களில் வாழும் மக்கள் தற்காலிக வீடுகளில், மின்சாரம், குடிநீர் வசதிகளற்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பெரும்பான்மைச் சிங்கள அரசிடம் வெல்வதென்பது துரித கதியில் நிகழக்கூடிய ஒன்றல்ல. அதேநேரம் ஒரு காலத்திலும் அடைய முடியாத இலக்குமல்ல. ஆயினும் மக்களின் சமகாலத் தேவைகள் குறித்த விடயங்களிலும் சமமான அக்கறை வெளிப்படுத்தப்பட வேண்டும். இன்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியிலும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் அல்லது புலிகளின் ராணுவக் கட்டமைப்புக்குள் வலிந்து திணிக்கப்பட்ட அப்பாவிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள விரக்தி நிலையானது நீண்டகால நிவர்த்திக்க முடியாத தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்காது சமூக நிலையைக் காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

(கிழக்கில் மட்டக்களப்பு, வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத் தீவு, வவுனியா கிளிநொச்சி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட, போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள்/போராளிகளின் சமூக நிலை தொடர்பான ஆசிரியரின் ஆய்விலிருந்து சில.

நன்றி: காலச்சுவடு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com