கிழக்கில் அரசியல் "வியூகம்" எடுக்கத் தவறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அப்துல் ரசாக் (ஏறாவூர்)-லண்டன்
இன்று அரசாங்கம் தான் விரும்புகின்ற ஒருவரை அவர் யாராக இருந்தாலும் கிழக்கில் முதலமைச்சராக்கி காரியமாற்றி வருவதை யாவரும் அறிவர். கடந்த தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சராக ஹிஸ்புல்லாவே வருவார் என்றே முழு உலகமும் எதிர்பாத்தது .ஆனால் அரசாங்கம் பிள்ளையானையே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நியமித்தது. கிழக்கைப் பொறுத்தவரை மற்றைய தமிழ் முஸ்லிம் இனத்தைப் போல் சிங்களவர்களும் 33 வீதமே வாழ்கின்றனர். அரசாங்கம் நினைத்திருந்தால் ஒரு சிங்களவரை தானும் முதலமைச்சராக நியமித்திருக்கக் கூடும் .எவ்வளவோ அரசாங்கம் செய்து விட்டது; இதைச் செய்வது பெரிய விசயமா ?
ஆனால் அன்றையச் சூழலில் சர்வதேச அரசியல் சதுரங்க மேடையில் காய்களை மிக லாவகமாக நகர்த்தும் நோக்குடன் சந்திரகாந்தன் என்னும் பிள்ளையானுக்கே அப்பதவியை அரசாங்கம் வழங்கியது. தற்போது அரசாங்கத்துக்குத் தேவையெல்லாம் அல்லது இன ரீதியான ஒரு முதலமைச்சரைப் பற்றி சிந்திப்பதெல்லாம் உண்மையில் இனரீதியான உள் நோக்கத்தின் அடிப்படையில் அல்ல என்பதை அரசியல் தளத்தில் இருந்து களமாடுபவர்கள் நன்கு அறிந்து கொள்ளவேண்டும். மாறாக ,சர்வதேசத்தை ஒரு நோக்கத்தின் அடிப்படையில் திசை திருப்பி காரியமாற்றுவதட்கான ஒரு தந்திரோபாய ரீதியிலான நியமனமொன்றாகவே அரசாங்கம் இந்த கிழக்கின் முதலமைச்சர் பதவியை பற்றி சிந்தித்துச் செயலாற்றி அனுகூலம் அடைந்து வருகின்றது.
இப்போது கேள்வி என்னவென்றால், இவ்வாறாக அரசாங்கம் சிந்தித்துச் செயலாற்றி வருவது போல் இந்தக் கிழக்குத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காய்களை ஏன் நகர்த்த முடியாது என்பதுதான். தன்னால் முதலமைச்சராக வரமுடியாத சாத்தியங்களும் கணிப்பீடுகளும் இல்லை எனும் போது, ஐயகோ என்று பின் வாங்காமல் அரசாங்கத்தால் மட்டுமல்ல, தன்னாலும் ஒரு முதலமைச்சரை அரங்கேற்ற முடியும் என்று அரசாங்கத்துக்கு பாடம் புகட்டுவதற்கான வழிகள் அதன் முன்னே விரிந்து கிடந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரசியல் வியூகம் ஒன்றை எடுக்கத் தவறிக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை.
அரசாங்க சுதந்திரக் கூட்டணிக்குள் பிள்ளையான் அணி எனும் தமிழ் அணி உட்பட, அதிசக்தி வாய்ந்த சிங்கள முஸ்லிம் அணிகளும் கிழக்குத் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் இந்நிலையில் தன்னந்தனியே ஒரு தமிழ் அணியாக இருந்து கொண்டு தமிழ் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கணிப்பு , தமிழ் கூட்டமைப்பின் ஒரு எல்லை கடந்த தப்புக் கணக்காகும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றார்கள். இன்றைய நாள் வரை முஸ்லிம் அணிகள் எல்லாம் அரசுடன் ஒரு குடையில் சாய்ந்தபின்பும், முதலமைச்சர் ஒருவரை தமிழ் கூட்டணி தனது கட்சியை மட்டும் மையமாக வைத்து வரைபு படுத்த முனைவது "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது" போல் அமையும் என்றே பலரும் கருதுகின்றனர்.
தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டுமா ?
அரசாங்கம் தான் விரும்புகின்ற முஸ்லிம் ஒருவரை அல்லது தமிழர் ஒருவரை நியமிக்கின்ற அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கிழக்கில் ஆட்சியமைத்து ஆட்டம் போட முற்படும் நிலையில் அதே அரசியல் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கோருகின்ற முதலமைச்சர் பதவியை தானே நியமித்து கிழக்கின் ஆட்சியாளன் தானே என்று சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி தனது இருப்பை ஏன் கிழக்கில் தக்க வைத்துக் கொள்ளமுடியாதென பலரும் அபிப்பிராயப் படுகின்றனர். இந்தத் தேர்தல் ஆடு களத்திலே இவ்வாறான வியூகமொன்றை எடுத்தாடா விட்டால் தமிழ் கூட்டமைப்பை வடக்கிலும் தலை எழுப்பாமல் ஆக்கி விடுவார்கள் இந்த ஆட்சியாளர்கள்.
அரசியல் வியூகம் எடுக்கத் தவறும் நிலை:
இம்முறை, எவ்வாறு கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுக்கே முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப் படவேண்டியது என்பது அரசாங்கத்தின் தலை எழுத்தாகும் . இந்தத் தலை எழுத்தை தானே முன்னின்று எழுதி, கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் "வியூகம்" எடுக்கும் தன்மையை தமிழ் கூட்டமைப்பு இழந்து கொண்டிருக்கின்றது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
கருத்துச்சுதந்திரம் : குறிப்பிட்ட ஆக்கம் திரு அப்துல் ரசாக் என்பவரின் கருத்தாகும்.
0 comments :
Post a Comment