இலங்கை அரசாங்கம் போலீஸ் காவலில் வைக்கும் காலத்தை நீட்டிக்க முயற்சிக்கின்றது
By Sanjaya Jayasekara : இலங்கை அரசாங்கம், எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் (யூ.என்.பீ.) தலைவர்களின் ஆதரவுடன், மக்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் போலீஸ் காவலில் வைக்கும் காலத்தை இரட்டிப்பாக்கும், அதாவது 48 மணி நேரமாக்கும், சட்டத்தை பாராளுமன்றம் மூலம் கொண்டுவர முயற்சிக்கின்றது.
குற்றவியல் சட்ட விதிக்கு முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்கள், கைது ஆணையின்றி கைது செய்தல், மற்றும் பொலிஸ் தடுப்புக் காவல் போன்றவை அடங்கும் சட்டத்தில் கனிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது, விதியின் 37வது பிரிவு, ஒரு சந்தேக நபரை நீதிபதி முன் நிறுத்தும் முன் 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கிறது.
2007ல், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் உள்நாட்டு யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட போது, முக்கியமாக பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதுடன் தொடர்புபட்ட, சில பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்கு போலீஸ் காவலில் வைக்கும் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த விதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் பின்னர், 31 மே, 2009 அன்று தளர்த்தப்பட்டன.
போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின் பிரேரிக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டம், முன்னெப்போதும் இல்லாத வகையில், 48 மணி நேர காலத்தை நிரந்தரமாக்கி அதை போலீஸ் காவலில் இருக்கும் அனைவருக்குமாக விரிவுபடுத்துகிறது. இது, அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மொத்தமாக மீறி, யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை பலப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றொரு நடவடிக்கை ஆகும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான, யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச இராஜபக்ஷ, இந்த திருத்தங்களுக்கு சங்கத்தின் ஆதரவை அறிவித்தார். "அதிகரிக்கும் குற்ற அலையை தடுக்கும் பொருட்டு எமது பிரதிநிதிகள் சந்தித்து மசோதாவுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்," என அவர் லக்பிமநியூஸ் பத்திரிகைக்குக் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில், யூ.என்.பீ. ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டதோடு, பல்வேறு போலி இடது குழுக்களும் அதை ஆதரித்தன. ஆனால் இராஜபக்ஷவின் கருத்துக்கள் வலதுசாரி பெரும் வணிகக் கட்சியின் உண்மையான நிறத்தை வெளிக்காட்டிவிட்டன.
"அனைத்து போலீசாரும் பிழையானவர்கள் அல்ல. போலீசார் நம் அனைவரது நன்மைக்காகவும் குற்றங்களை எதிர்த்து போரிடுகின்றனர். எனவே உதவ வேண்டியது எமது கடமையாகும்,” என இராஜபக்ஷ டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். எனினும், அதே பேட்டியில், சித்திரவதை என்பது வழக்கமான போலீஸ் கருவியாக இருக்கின்றது என்றும் ஒப்புக்கொண்டார். "இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படாமல், சட்டம் இருப்பது போன்றே இருந்தாலும் கூட, சித்திரவதை நிறுத்தப்பட முடியாது," என்று அவர் சிடுமூஞ்சித்தனமாக வாதிட்டார்.
0 comments :
Post a Comment