Tuesday, July 3, 2012

நீங்கள் வீதியில் இறங்கி போராடியதாலேயே இன்று நாடு முழுவதும் நியமனம். கிழக்கில் கருணா.

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தமக்கு வேலை வாய்ப்பு கோரி வீதியில் இறங்கி போராடியதன் காரணமாகவே ஜனாதிபதி மட்டத்திற்கு இந்த பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு நாடு முழுவதிலும் பட்டதாரி பயிலுனர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன அந்த வகையில் நீங்கள் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் என மீள்குடியேற்ற துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

”பிள்ளைகள் உயர்தரத்திற்குப் பின் படித்து ஒரு பட்டதாரியாகி வேலையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் கனவாக இருக்கின்றது. ஒரு பட்டதாரியாகியும் அதன் பலனை அடைய முடியாமல் நீங்கள் எத்தனையோ தடவை வீதிகளில் நின்று புழுதிகளில் நின்று பஸ்தரிப்பு நிலையங்களில் இருந்தெல்லாம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றீர்கள்.

பல தடவை நான் அங்கு வந்து உங்களை சந்தித்திருக்கின்றேன். இனமத பேதமற்ற வகையில் முஸ்லிம் மாணவிகளும் அந்த புழுதிகளில் நின்று போராடியதை நான் பார்த்தேன். அந்த சிரமங்களையெல்லாம் பட்டுத்தான் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் பெருமைக்குரிய விடயம் என்னவென்றால் எமது மட்டக்களப்பு பட்டதாரிகளின் முயற்சியின் விளைவு தான் முழு இலங்கையிலுள்ள பட்டதாரிகளையும் இந்தளவிற்கு முயற்சியெடுக்க வைத்திருக்கின்றது.

இன்று அதன் பலனாக கட்டம் கட்டமாக இந்த பட்டதாரிகள் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் பல தடைகள் இருந்தன. எங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி நாங்கள் இந்த நியமனங்களை பெற்றுத் தந்திருக்கின்றோம். அந்த வகையில் எமது மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பஷீர் ஷேகுதாவூத், ஹிஸ்புல்லாஹ் போன்றோரை நான் பாராட்டுகின்றேன்.

என்ன முடிவுகளை நாங்கள் எடுத்தாலும் மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக கதைத்து அவர்களுடைய கருத்தின்படி தான் நாங்கள் பல பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் கதைத்திருக்கின்றோம்.

இந்த நியமனங்கள் வழங்கப்படுவதற்கு முன் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் இரவுபகல் பாராது என்னுடன் தொலைபேசியில் கதைத்து உங்களுக்காக கடுமையாக உழைத்தவர் எமது மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் திருமதி.சார்ள்ஸ். அவருக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்.

நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நியமனங்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்வடைகின்றோம். உண்மையில் இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். வெளிநாடுகளில் கல்வியை கற்க வேண்டுமென்றால் நாங்கள் காசு கொடுத்து தான் கற்க வேண்டும். வேலைகள் அங்கு கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் தான் எடுக்க வேண்டும். படிப்பவர்கள் வேலையை பெற்றுச் செல்லும் நிலையே ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றது.

பட்டதாரியாகி அடுத்த நாளே வேலையை பெற்றுக்கொள்ள முடியும். எந்த மேற்படிப்பையும் படிப்பதற்கு நீங்கள் கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். படித்து முடிக்கும் முன்னரே சில நிறுவனங்கள் உங்களை பொறுப்பேற்கும். அந்த நடைமுறை இந்த நாட்டில் இல்லாத காரணத்தினால் தான் இன்று இந்த பட்டதாரிகள் அனைவரும் சிரமப்படுகின்றனர். இதை எதிர்காலத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அதற்காகத்தான் அரசாங்கம் முயற்சியெடுத்து வருகின்றது.

நீண்ட கால யுத்தம் எங்களை பின் தள்ளி வைத்திருக்கின்றது. புதிய காலத்திற்கு நாங்கள் மாறவேண்டும் என்று நினைக்கின்றோம். முடியாது என்றாலும் நாங்கள் சாதிப்போம். 30 வருட இடைவெளியை 3 வருடத்திற்குள்ளோ 10 வருடத்திற்குள்ளோ மாற்ற நினைப்பது கடினமான விடயமாகும்.

எங்கள் மாவட்டத்தில் ஒரு குறுகிய அரசியல் இருந்தாலும் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம். ஒரு நாட்டின் பலத்தை ஆரம்ப காலங்களில் படைகளை கொண்டு தான் கணிப்பார்கள். பின் பணத்தைக் கொண்டு கணித்தார்கள். தற்போது கல்வியை கொண்டு கணிப்பிடுகின்றார்கள். அந்தளவிற்கு தற்போது தொழினுட்பம் வளர்ந்திருக்கின்றது. நாங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவுகின்ற நனோ தொழினுட்பத்திற்கு இன்னும் வரவில்லை. வருவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றோம். அதற்கான வாசற்படிகளில் தான் நீங்கள் தற்போது நுழைகின்றீர்கள்.

2004ஆம் ஆண்டு பட்டதாரியான ஒரு மாணவன் இற்றைவரை வேலையை பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கின்றான் என்றால் அவனுடைய வளம் இந்த நாட்டில் பயன்படுத்தப்படவில்லை என்றே அர்த்தமாகும். பட்டம் பெறுவதென்பது சுலபமான விடயமல்ல. அதற்காக கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தற்போது தான் உங்கள் வளம் பயன்படுத்தப்படப்போகின்றது.

ஒரு சிறிய மாவட்டத்திற்குள் 2000 பட்டதாரிகள் ஒரே தடவையில் வேலை வாய்ப்பை பெறும்போது நடக்கின்ற அபிவிருத்திகள் ஒழுங்காக நடைபெறும். பாரிய மாற்றம் ஏற்படும். பயிற்சிக்காலம் முடிந்ததும் நீங்கள் நிரந்தர நியமனம் பெறலாம். மேலும் படிக்கலாம். உங்களுடைய முயற்சிகளை நீங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் எதிர்பார்ப்பாகும்.

இன்று ஒரு நிம்மதியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து வருகின்றாம். நேற்று ஒரு பத்திரிகை செய்தியில் அரசியல் காரணங்களுக்காக பட்டதாரிகள் நியமனங்கள் இழுத்தடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அவ்வாறில்லை. எங்கள் மாவட்ட மக்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கமாகும்.

எல்லா வளங்களும் நிறைந்தது தான் மட்டக்களப்பு மாவட்டமாகும். இங்கு ஒரு குறையுமில்லை. இதை ஒரு சிறந்த மாவட்டமாக நாங்கள் உருவாக்க வேண்டும். இன பேதமின்றி அனைவரும் சந்தோஷமாக இன்று வாழ்ந்து வருகின்றோம். அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும்.

வேலைவாய்பின்மை காரணமாக பலரது திருமணங்கள் தடைப்பட்டிருப்பதாக பஷீர் ஷேகுதாவூத் அவர்கள் கூறினார்கள். அந்தளவிற்கு வேலைவாய்பின்மை என்பது எமது சமூகத்தில் பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.

நாங்கள் அனைவரும் எதிர்பார்ப்பது அரசாங்க வேலையாகும் இது எங்கள் மத்தியில் காணப்படும் பலவீனமாகும். சுயதொழில் முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவேண்டும். அப்போது நிறைய மாற்றங்களை கொண்டுவர முடியும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். ஒரு பட்டதாரியை இன்னொரு பட்டதாரி உருவாக்கலாம். ஒரு வைத்தியரை இன்னொரு வைத்தியர் உருவாக்கலாம். ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு 10 விரிவுரையாளர்கள் தேவை. அவர்களின் முயற்சியின் காரணமாகத்தான் நீங்கள் பட்டதாரிகளாக உருவாகியிருக்கின்றீர்கள்.

உங்கள் பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு உங்களை படிப்பித்திருப்பார்கள். அவர்களை நாங்கள் மறக்கக்கூடாது. ஒரு ஆசிரியரை வாழ்வில் மறக்க முடியாது. அவரால் ஒரு பொறியியலாளரை உருவாக்க முடியும். ஒரு வைத்தியரை உருவாக்க முடியும். ஆனால் அவர் இறுதிவரை ஒரு ஆசிரியராகவே இருப்பார். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்களை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது.”என்றார்.





No comments:

Post a Comment