வெள்ளைவேனால் கடத்தப்பட்டவர் விமானநிலையத்தில் கைது.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப் பட்டிருந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனதாக போலி தகவல்களை வழங்கியிருந்த குறித்த சந்தேக நபர், கட்டாரிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார். இவர் கிழக்கிலும் ஊவா மாகாணத்திலும் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், மின் பிறப்பாக்கிகளை சேதமாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தார் என பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துட,ன் இவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாவும், அதற்கான பிடி விராந்தும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும், இவர் காணாமல் போய் விட்டதாக அவரது உறவினர்களால் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.
இவர் அரசாங்க படையினராலோ அல்லது பொலிஸாரினாலோ கடத்தப்பட்டிருக்கலாமென அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது எனவும், இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் செய்யப்படவுள்ளார் எனவும், பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment