மீண்டுமொரு பெரிய குற்றத்தை செய்யாமல். அரசுடன் இணைய வேண்டும்
மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுதற்கான ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
பொலன்நறுவை கதுருவெல முஸ்லிம் கிராமத்தில் ஸ்ரீ. சு. கட்சியின் மீள் கட்டமைப்பு பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு பல விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையப்போகின்றது. இதில் குறிப்பாக முஸ்லிம்கள் தற்போது படிப்டிபடியாக இழந்து கொண்டிருக்கின்ற எமது உரிமைகளை வென்றெடுக்க வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம்கள் சிறந்த முறையில் ஒற்றுமையுடன் நடந்து கொள்ளாமையின் காரணத்தினால் மாகாண முதல் அமைச்சர் பதவி எம்மிடமிருந்து பறிபோனது என்பதை இன்னும் யாரும் மறக்க முடியாது . மீண்டும் அந்த பெரிய குற்றத்தைத் தெரிந்து கொண்டு செய்யாமல் நடந்த கொள்ள வேண்டும்.
முதல் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இருக்கின்ற ஒரே ஒரு மாகாண சபை கிழக்கு மாகாண சபை ஆகும். இங்கு கூடுதலான வாக்குப் பலம் முஸ்லிம் காங்கிரசுக்கே உள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொள்ளும் பட்சத்தில் இதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதேவேளை அனைத்து முஸ்லிம் கட்சிகளும் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் கூடுலான உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த நிலைய பொலன்நறுவை மாவட்டத்திலும் ஏற்படும் போது குறைந்தது இரு மாகாண சபை உறுப்பினர்களை எமக்குப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் ஒன்று ஏற்படும்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவது காலத்தின் தேவையாக இருக்கிறது. ஆகவே, நாங்கள் சமுதாய நோக்கோடு கட்சியின் மேன்பாட்டுக்காக மட்டுமன்றி சமுதாயத்தின் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டிய கட்டாயக் காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எந்த அரசியல் முன்னெடுப்பு விடயமானாலும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் போதுதான் எம்முடைய உரிமைகளையும் சலுகைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்கு இந்த மாகாண சபைத் தேர்தலை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களின் போது வடக்கு கிழக்கில் தமிழ் கூட்டமைப்பின் ஒற்றுமையையும் மலையகத்தில் தோட்டப்புற மையமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அணியில் கீழ் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்பதைக் காண்கின்றோம்.
பொலன்நறுவை கதுருவெலப் பிரதேசத்தில் சிறுபான்மையின மக்கள் வாழும் கிராமங்கள் கூடுதலாக உள்ளன. இந்தக் கிராமங்களின் அபிவிருத்தி முன்னேடுப்புக்களைக் கருத்திற் கொண்டு நன்கு சிந்தித்து செயற்படுவோமாயின் நல்ல பயனை அடையமுடியும்.
ஒன்றுக்கும் இயலாத கட்சிகளின் பின்னால் சென்று பிழையான வழிகளில் செல்வதை விட்டு விலகி தற்போது எந்த வழியினூடாக உன்னத நிலையை அடைய முடியும் எனச் சிந்தித்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிருபர்.
இக்பால் அலி.
0 comments :
Post a Comment