Sunday, July 15, 2012

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுக்களும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை உருவாக்கி வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் இணையதளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்று தொடர்ந்துபிரச்சாரம் செய்து வருகின்றனர். இணையதளங்களின் மூலமான இத்தகைய பிரச்சாரங்களால் இந்திய அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து புலிகளின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கான தமிழருக்கென தனி தாயகம் - தமிழீழத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பு விளைவிக்கக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழருக்கு எனத் தனித் தாயகமான தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழீழம் என்பதே இந்தியாவுக்கு எதிரானது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

பிரதீபன் ,  July 15, 2012 at 7:32 PM  

எங்களுக்கு இந்தியா வந்து எல்லாம் பண்ணும் என்று ஓலமிட்டுக்கொண்டு திரிகின்ற ராமராஜனுக்கும் தற்போது ராமராஜனுக்கு கூஜா தூக்கிக்கொண்டு திரிகிறவரும் நான்தான் புளொட் என்று கிலுக்கி கொண்டு திரிகிறவருமான சிவபாலனுக்கும் இந்த செய்தியை யாரும் வாசித்து காட்டுங்கோ.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com