மரண தண்டனை அமுலாக்கம் குறித்து இனியும் ஆலோசிப்பதில் அர்த்தமில்லை
நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை நோக்குமிடத்தில் மரண தண்டனையை அமுலாக்குவது குறித்து இனியும் ஆலோசனை நடத்துவதிலோ கருத்தறிவதிலோ அர்த்தமில்லை என்றே கூறவேண்டும். குறிப்பாக பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரம், அதன் பின்னரான ஈவிரக்கமற்ற கொலை, பெண்களை மானபங்கம் செய்தல் என்பன இப்போது மலிந்துவிட்ட ஒரு சமாச்சாரமாகவே கருதப்படுகின்றது. இந்தக் கேடுகெட்ட கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் சட்டத்தை மிகவும் கடுமையாக்கு வதைத் தவிர வேறு வழியில்லை.
அதேவேளை சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென அரசியல் வாதிகளும், ஊடகங்களும் வெறுமனே கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமுமில்லை. உடனடியாகவே செயலில் இறங்கியே ஆக வேண்டும். அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்றுவரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான தொடர் செய்திகளைப் பார்க்குமிடத்தில் எமது நாட்டு மக்களின் கலாசாரம் குறித்து வெட்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளிவரும் சம்பவங்கள் தவிர்த்து வெளியே வராத இதுபோன்ற சம்பவங்கள் நிறையவே உள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். குடும்ப உறவுகளுக் கிடையே இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் மூடிம றைக்கப்படுவதுடன் இதுவே கொடூரர்களின் தொடர் குற்றமி ழைப்பிற்கும் பெரிதும் காரணமாகவும் அமைந்துவிடுகின்றது.
அண்மையில் கிருலப்பனையில் இடம்பெற்ற எட்டு வயதே ஆன சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட பலாத்காரமும் அதன் பின்னர் அச்சிறுமி கொல் லப்பட்டதுமான சம்பவமானது மனித குலத்திற்கே அவமானமாக அமை ந்துள்ளது. இச்சம்பவத்தில் இன்னார்தான் குற்றவாளி எனத் தெரிந்துவிட்ட பின்னரும் தண்டனை வழங்குவதில் ஏன் இன்னமும் காலதாமதம் என்பது பலரதும் கேள்வியாக உள்ளது.
இது மட்டுமா வெளியே சொல்ல வாய் கூசும், எழுத்தில் எழுத கை இடம்கொடுக்காத பல சம்பவங்களும் கிராமப் புறங்களில் நடந்தேறி வரு கின்றன. பாடசாலை செல்லும் வழியில் பாதையோர காமுகர்களால் வஞ்சிக்கப்படும் இளம் தளிர்கள் தமது கல்விச் சுமைக்கு மத்தியில் இவற் றையும் தாங்கிக் கொள்ள நேரிடுகிறது. பாடசாலை வான்களில் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் மேலதிகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டும் எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
தெரிந்தவர்தானே என்றோ வயதான அங்கிள்தானே என்றோ பிள்ளை குட்டிகள் உள்ள குடும்பஸ்தர்தானே என்றோ பாடசாலை வான் சாரதிகளை ஒருபோதும் எடுத்த எடுப்பிலேயே நம்பிவிடக் கூடாது. எமக்கு மிக நம்பிக்கையானவராக இருந்தாலும் அவர் மீது நாம் சந்தேகக் கண் கொண்டே நோக்க வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனை, செயற்பாடு குறித்து ஒவ்வொருநாளும் அவதானம் செலுத்த வேண்டும். சந்தேகம் வந்தால் உடனடியாகவே வேறு வானை நாட வேண்டும். அந்தளவிற்குக் காலம் கெட்டுக் கிடப்பதால் பெற்றோரிடையே விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
அத்துடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள் நேர காலத்திற்கு வீடு வருகிறார்களா, அவர்களது நண்பர்கள் எவ்வாறான பழக்கவழக்கம் உள்ளவர்கள் என்பது குறித்தும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும். இன்று ஒரு சில பாடசாலைகளில் காமக் கொடூரர்கள் அதிபர், ஆசிரியர் ரூபத்திலே உள்ளனர். வேலியே பயிரை மேய்வது போன்று இத்தகையவர்களிடமிருந்தும் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. அதேபோன்று சில பொலிஸ் நிலையங்களில் சில பொலிஸாரே இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டும் உள்ளனர்.
எனவே நாட்டில் படுமோசமாக அதிகரித்துவரும் இந்தப் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் பலாத்காரத்திற்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் சட்டம் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும். பாலியல் பலாத்கார விசாரணைகளை வருடக்கணக்கில் இழுத்துச் செல்லாது தீவிரமான விசாரணை நடத்தி குற்றவாளியை இனங்கண்டதும் மரண தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் தண்டனைகள் மூலமாக இனி இவ்வாறு குற்றமிழைக்க முயல்பவர் பயப்பட வேண்டும்.
இந்தியாவில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிப் பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்களது புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும். சம்பவ இடத்திற்குப் பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு புகைப்படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்க பொலிஸாரே இடமளிப்பர். தொலைக்காட்சிகளிலும் இவ்வாறானவர்களின் படங்கள் ஒளிபரப்பப்படும். இது ஒருவகையில் குற்றமிழைக்க முயல்வோரைச் சிந்திக்க வைக்கும். தமக்கும் இதே நிலைவரும், ஊர் உலகம் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் எனும் ஒரு வகைப் பயத்தை மனங்களில் உருவாக்கும். இலங்கையிலும் இந்த நடைமுறையை பொலிஸார் ஊக்குவிக்க வேண்டும். ஊடகங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
சவூதி அரேபியா, குவைத், கட்டார் போன்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளில் உள்ளது போது இத்தகைய குறும்புக் குற்றம் இழைப்போருக்கு அவர்களது ஆணிவேரையே பிடுங்குவது போன்று குற்றத்தைச் செய்யத்தூண்டும் அந்த உறுப்பை வெட்டியெறிந்துவிட வேண்டும். இதனை நகைச்சுவைக்காக எழுதவில்லை. இன்று எமது நாட்டிலுள்ள அவசியத் தேவையாக இவ்விடயம் உள்ளது. இதில் கால தாமதத்தை ஏற்படுத்த ஏற்படுத்த அது குற்றமிழைப்போருக்கே சாதகமாக அமைந்துவிடுகிறது.
எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாது உடனடியாக தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அத்துடன் மக்களிடையேயும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சட்ட இறுக்கமே இவ்விடயத்திற்கு விடை தரும் என்பது பொதுவான கருத்து. பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறையின்றிச் செயற்பட்டால் தம்மை அறியாமலேயே பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். விழிப்பாக இருந்து எமது நாட்டின் எதிர்காலச் செல்வங்களைப் பாதுகாப்போமென அனைவரும் ஒன்றிணைந்து திடசங்கற்பம் பூணுவோம்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment