Wednesday, July 4, 2012

மாகாண சபை தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் ரணிலின் திட்டம் அம்பலம்

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டதை யடுத்து, இச்சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில், தமக்கு பிடித்தவர்களையும், தலைவரின் மனம் கவர்ந்தவர்களையும், மட்டுமே வேட்பாளர்களாக தெரிவு செய்ய ரணில் விக்ரமசிங்க திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி பிரச்சினைகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக, அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிணங்க, வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது கரு மற்றும் சஜித் ஆதரவாளர்களை தெரிவு செய்ய வேண்டாமென குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், வேறு கட்சிகளின் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர்கள், மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தெடர்புடைய மாகாண சபை உறுப்பினர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யவதில்லையெனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

அத்துடன், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 2 உறுப்பினர்களுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சஜித் மற்றும் கரு அணியை சேர்ந்தவர்களாவர்.

தோல்வி நிச்சயம் என்று தெரிந்த நிலையிலும் இவ்வாறு மோசமான அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் முன்னெடுப்பதாக அக்கட்சியின் மாற்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் முடிவடைந்தவுடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு எதிரான போராட்டம் புதிய பரிமானத்தில் முன்னெடுக்கப்படுமென அக்கட்சியின் மாற்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com