கடல்புலி அணியில் போரிட்டவர், இலங்கை நீச்சல் அணியில் டில்லி செல்கிறார்!
இலங்கையில் யுத்தத்தின் பின் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர், அடுத்த வருடம் புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணியில் இணைந்து கொள்வதற்கான பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளனர் என, இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்ட இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷா டி அபேகோன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக யுத்தத்தில் ஈடுபட்ட இந்த 16 பேரும், தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, கராத்தே, கிரிக்கெட் ஆகிய போட்டிகளுக்கான டீம்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
“தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர், விடுதலைப் புலிகளின் சினைப்பர் குழுவில் (தொலைவில் இருந்து குறி பார்த்து சுடும் குழு) இருந்தவர். இலங்கை நீச்சல் அணியில் பயிற்சி பெறும் ஒருவர், விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் அணியில் இருந்தவர். இந்த 16 பேருமே திறமைசாலிகள். போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளார்கள்” என்றார் ஹர்ஷா டி அபேகோன்.
இவர்கள் இலங்கை அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, விளையாட்டு அமைச்சு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் கலந்து கொள்ளவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிகள் புதுடில்லியில் நடைபெறவுள்ளதால், டில்லி மீடியாக்களின் கவனம் இவர்கள் மீது போகஸ் பண்ணப்பட வாய்ப்பு உள்ளது.
0 comments :
Post a Comment