Thursday, July 5, 2012

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? - தேர்தல்கள் ஆணையாளர்.

மாகாண சபை தேர்தலில் முறையாக பூரணப்படுத்தப்பட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்யுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், வேட்பு மனுவுடன் இம்முறை அதன் பிரதியொன்றும் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், இவ்வாறு பிரதியொன்று இணைக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய நபரின் மூலம் வேட்பு மனுக்கள் ஒப்படைக்கப்படாமை, குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேட்பு மனுவை ஒப்படைக்காமை, உரிய வகையில் கட்டுப்பணத்தை செலுத்தாமை போன்ற காரணங்களினால் பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேட்பாளரின் எழுத்து மூலமான சம்மதம் இல்லாமை, அனைத்து வேட்பாளர்களின் சத்தியக்கடதாசி இணைக்கப்படாமை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் செயலாளர் அல்லது சுயேட்சைக்குழுவின் தலைவர் வேட்பு மனுவில் கைச்சாத்திடாமை, மற்றும் கையொப்பம் சமாதான நீதவான் ஒருவரினால் உறுதிப்படுத்தப்படாமை, போன்ற விடயங்கள் கடந்த கால தேர்தல்களில் இடம்பெற்றதாகவும், இதனால், ஏராளமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com