கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஸ்ரீலங்கா : இரண்டு தலையீடுகளின் ஒரு கதை
கேணல். ஆர்.ஹரிஹரன்
1987ல் ஏற்படுத்தப்பட்டதும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என அழைக்கப்படுவதுமான இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை ஜூலை 29 ந்திகதியுடன் 25வருடங்களை நிறைவு செய்கிறது. ஸ்ரீலங்கா (1987 – 90) மற்றும் 1971ல் பங்களாதேஷை உருவாக்கிய கிழக்குப் பாகிஸ்தான் ஆகிய இந்தியாவின் இரண்டு இராணுவத் தலையீடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற ஒரு இராணுவ வீரன் என்கிற வகையில் இந்த இரண்டு முயற்சிகளிலும் இந்தியாவின் அதிகார சக்தியின் வலியுறுத்தலை ஒப்பீடு செய்ய முடியாதவனாக உள்ளேன்.
இரண்டு அரங்குகளிலும் மற்றும் அந்த நேரத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளின் போதுள்ள இந்தியாவின் நிலைப்பாட்டிலும் முற்றான வேறுபாடு இருந்தது. பங்களாதேஷை பொறுத்தமட்டில் நன்கு பயிற்றப்பட்ட இராணுவமான பாகிஸ்தானுடன் நடத்தும் மரபுவழி யுத்தமாக இருந்தது. அதில் இறங்குவதற்கு முன்னர் பலத்த இராணுவ திட்டங்களையும் மற்றும் தயாரிப்புகளையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதற்கு முரண்பாடாக ஸ்ரீலங்காவில் இராணுவம் ஆயத்தமில்லாத நிலையில் இருந்தபடியால் தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் எதிர்க்கிளர்ச்சித் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. பங்களாதேஷில் படைகளின் நிலை மிகவும் உயர் மட்டத்தில் இருந்தது. விமானப்படைகளும் மற்றும் கடற்படையினரும் ஒட்டுமொத்த தாக்குதல் திட்டத்திலும் ஒரு பகுதியாகச் செயற்பட்டன. ஸ்ரீலங்காவில் முக்கியமாக அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட ஒரு காலாட்படை நடவடிக்கையாக இருந்தது.
மிகப் பெரிய வேறுபாடு
ஒருவேளை அதிலிருந்த மிகப் பெரிய வேறுபாடாக காலாட்படைகளுக்கு வழங்கப்பட்ட பணி இருந்தது. 1971ம் ஆண்டின் போரின் நோக்கம் கிழக்குப் பாகிஸ்தானைக் கைப்பற்றுவதல்ல, ஆனால் கிழக்குப் பாகிஸ்தானிய மண்ணில் சுதந்திரமான பங்களாதேஷ் அரசாங்கத்தை உருவாக்குவதாகும். மாறாக ஸ்ரீலங்காவில் இந்தியாவின் இராணுவத் தலையீடு, ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தமிழ் போராளிகளுக்கும் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் உள்ள போராட்டத்தை நிறுத்தி போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தவேண்டிய ஒரு தெளிவற்ற கட்டாயம் இருந்தது. அதில் யாருடனும் யுத்தம் செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை.
இந்த இரண்டு பயணங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் கூட இருந்தன. இரண்டிலும் இந்தியாவுக்கு தெற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை ஈடுகட்டும் பனிப்போர் பண்புகளை கொண்ட பரந்த மூலோபாய நோக்கங்கள் இருந்தன. கிழக்கு பாகிஸ்தானில் வங்காளிகளும் மற்றும் ஸ்ரீலங்காவில் தமிழ் சிறுபான்மையினத்தவரும் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்களுக்கு உதவ வேண்டியது தனது தேசிய ஆர்வமாக உள்ளது என இந்தியா நினைத்தது. இரண்டு தலையீடுகளுக்கு முன்பும் பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் தங்கள் அரசாங்க படைகளுக்கு எதிராக போராட எழுச்சி கொண்டிருந்தனர்.
1971ம் ஆண்டு யுத்தம், பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா ஆகியவற்றுக்கு கிழக்கிந்தியாவுக்கான அவற்றின் வழிகளை தடுத்தன் பயனாக இந்தியாவின் மூலோபாய நோக்கங்களை பாதுகாக்க முடிந்தது. மேலும் பாகிஸ்தானின் அடிமைத் தளைக்குள் இருந்து விடுபட விரும்பிய மக்களின் அபிலாசைகளையும் அது பூர்த்தி செய்யது. யாராலும் சவால்விட முடியாத கிழக்கு பாகிஸ்தானின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1971 மார்ச் 26ல் சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியா அரசியல் ரீதியாக தலையீடு எதனையும் அங்கு செய்யவில்லை. சுதந்திரப் பிரகடனம் செய்து எட்டு மாதங்களுக்கு மேல் சென்ற பிறகே இந்தியா யுத்தத்தை மேற்கொண்டது.
1971 டிசம்பர் 3முதல் 17 வரை வெறும் இரண்டு வாரங்களே யுத்தம் இடம்பெற்றது. பங்களாதேஷின் சுதந்திர போராட்ட வீரர்களான முக்தி பகினியின் உதவிதான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது. அது பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தலைமைத்துவத்துக்கு ஒரு காணிக்கையாகவும், இராணுவ தலைமை தளபதி, ஜெனரல். மனிக்ஷா அவர்களின் திறமையான திட்டமிடல் மூலம் போரை நடத்தி வெற்றிகண்ட ஒரு வெற்றிக் கணமாகவும் இருந்தது. இந்திய ஆயுதப்படைகள் யுத்தக்களத்தில் சுமார் 3,000த்துக்கும் மேலான உயிர்களை பலி கொடுத்தன, 9,000த்துக்கும் அதிகம் பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 97,000 பேர்கள் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர்.தெற்காசியாவில் தனது அதிகாரத்தை வலியுறுத்தி இந்தியா ஒரு வலிமையான செய்தியை வெளியிட்டது, மற்றும் இந்த சாதனையை நாடே பாராட்டியது.
1983ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் வெடித்ததின் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறத் தொடங்கியபோதுதான் இந்தியா முதன்முதலாக ஸ்ரீலங்கா தலைவர்களுடன் தொடர்புகொண்டு நெருக்கடியை தணிப்பதில் ஈடுபட்டது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், நிலமைகள் வேறுவேறானவை என்பதை புரிந்து கொள்ளாமலே பங்களாதேஷில் இந்தியாவின் தலையீட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் அதிகளவு எதிபார்ப்புகளை கட்டியெழுப்பியிருந்தனர்.
உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் எதிர்பாராதவிதமாக ஆயுதங்களை கைவிட்டு பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைய மறுத்த எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியாளர்களுடன் ஒரு யுத்தத்தில் சிக்கிக் கொண்டது. மூன்று வருடங்கள் நடைபெற்ற போரில் 1,225 இந்திய வீரர்களின் உயிரை விலையாக கொடுத்ததுடன் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா மக்கள் கொல்லப்பட அல்லது காயப்பட நேர்ந்தது. ஸ்ரீலங்காவின் ஜனநாயக நடைமுறைகள், உடன்படிக்கையை கட்டியெழுப்பியவர்களுக்கு இரு நாடுகளிலும் கதவடைப்பு செய்ததால் இந்தியாவின் தலையீடு திடீரென முடிவுக்கு வந்தது.
இரண்டு இராணுவத் தலையீடுகளும் இந்தியாவுக்கும் அதன் ஆயுதப் படையினருக்கும் பாடங்களை போதித்துள்ளன. முதலாவதாக அத்தகைய தலையீடுகளுக்கு இயக்கத் திறன் மிக்க தலைமை தேவை.இந்திரா காந்தி அவர்களின் தலைமைத்துவம்தான் 1971ம் ஆண்டு அந்த வெற்றியை தேடித்தந்தது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. மரபுவழியாக ஜவகர்லால் நேருவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட புகழ் ஒளிக்கு அப்பால் நாடு தழுவிய ஒரு பின்துணை அவருக்கிருந்தது. அவரது வலிமையான சிந்தித்து செயலாற்றும் எல்லை மீறாத சர்வாதிகாரம், மற்றும் அதை அணுகவேண்டிய வழிகளைக் காட்டிலும் அதன் முடிவுகளைக் கவனிப்பது போன்ற திறமைகள் அவருக்கிருந்தன.
அவர் எடுத்த காரியத்தை கைவிடாத தன்மையானவர், போருக்கான தயாரிப்புகளுக்கு கால அவகாசம் தேவை என ஜெனரல் (பின்னர், பீல்டு மார்ஷல் ஆனவர்) மனிக்ஷா கோரியதும், அவர் கிழக்குப் பாகிஸ்தானில் இராணுவ தலையீடு செய்வதை தள்ளி வைத்தார். கிழக்கு பாகிஸ்தானில் கொலை செய்வதற்கு முன்னர் அவர் மிகவும் உறுதியான சர்வதேச நாடுகளின் ஆதரவை கட்டியெழுப்பியிருந்தார்.பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா அல்லது சீன இராணுவ தலையீடு ஏற்படும் சாத்தியமிருந்தால் அதை எதிர்கொள்வதற்காக அவரிடம் இந்தோ – சோவியத் நட்புறவு உடன்படிக்கை எனும் மாற்று திட்டமும் கைவசம் இருந்தது. கண்மூடித்தனமான பாகிஸ்தானிய இராணுவ சர்வதிகாரிகள் அவரது பிடியில் வசமாக மாட்டிக் கொண்டனர். இந்தியப்படைகள் உள்ளே நுழைந்ததும் ஜனாதிபதி நிக்ஸன் கண்ணிமைக்க மறந்து போனார், மீதி எல்லாம் வரலாறு.
தனது தாயாரிடமிருந்து ராஜீவ் காந்தி மரபுரிமையாக தலைமைத்துவத்தை பெற்ற நேரத்தில், இந்திரா காந்தியின் தவறான செயற்பாடாக தோற்றம் பெற்றிருந்த தேசிய அவசரகால நிலை கணிசமானளவு அவரது புகழை மங்கச் செய்திருந்தது. ராஜீவ் காந்தி அரசியலில் அப்பாவியாக இருந்தார். அவர் அதிக அனுபவங்களை பெற்றுக் கொண்டதும், அவர் பொறுமையற்ற ஒரு தலைமைத்துவ பாணியை கையாண்டார். நல்ல அனுபவமுள்ள காங்கிரஸ் தலைவரும் அவரது சக அமைச்சருமான பி.வி.நரசிம்மராவ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டாம் என்று வழங்கிய அறிவுரைக்கு அவர் செவிசாய்க்கவில்லை.
நான் ஆகஸ்ட் 1987ல் யாழ்ப்பாணம் வந்திறங்கியபோது, ஜெயவர்தனவை பற்றி நன்கு அறிந்திருந்த ஸ்ரீலங்காவாசிகள் சிலர், அவர் இந்தியப் படைகளை எல்.ரீ.ரீ.ஈயுடன் போரிட வைப்பார் என்று எனக்கு எச்சரிக்கை தந்தனர். அப்போது நான் அவர்களை நம்பவில்லை, ஆனால் பின்னறிவு வந்தபோது அவருள் மறைந்திருந்த திட்டம் அதுதான் எனத் தோன்றியது. இந்தியா பின்னாளில் தொடர்ந்தும் நிலைத்திருக்காது என்று எழுதப்படாத வாக்குறுதிகளையும் ராஜீவ் காந்தி வழங்கியிருந்தார். இந்தியத் துருப்புகள் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவினை பிரேமதாஸ விதித்தபோது ராஜீவிடம் மாற்று திட்டம் இருக்கவில்லை.
இரண்டாவது அம்சம் இராணுவம் தொடர்பானது, ஸ்ரீலங்காவில் தலையீடு செய்த விடயத்தில் ஒரு தேசிய இலக்கு இல்லாதபடியால் அது இராணுவத்தின் சிந்தனைகளை திசைதிருப்ப வழி வகுத்தது. ஒரு வெளிநாட்டு செயல்பாடு வெற்றிபெற தேவைப்படுவது, இராணுவம் மூலோபாயமுள்ள கட்டமைப்பான முடிவுகளை மேற்கொள்ளும் நடைமுறைகளில் நெருக்கமாக ஈடுபடுவதுதான். இந்த அணுகுமுறை இல்லாதபடியால்தான் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் மேற்கொண்ட தியாகம் அர்த்தமற்ற ஒன்றாகிப் போனது. எல்.ரீ.ரீ.ஈ தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறி மீண்டும் ஆயுதங்களை கையிலெடுத்ததுக்கு இராணுவம் ஒரு காரணியல்ல. அதன் விளைவாக படைகள் ஸ்ரீலங்காவுக்கு விரைந்து முன்பின் அறிமுகமற்ற ஒரு பிரதேசத்தில் இறங்கிய சில மணி நேரங்களிலேயே யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியது.
அரசியல் தலைமைகளின் உடனடி வேண்டுகோள்களுக்கு எல்லாம் அதனுடன் தொடர்பான பணிகளின் நிதர்சனத் தன்மையை பற்றி சிந்தனை செய்யாது இராணுவம் செயற்பட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய இராணுவம் ஏற்றுக் கொண்டபோது, இராணுவம் அல்லது உள்நாட்டு புலனாய்வு வளங்கள் அதனிடம் குறைவாகவே இருந்தன. எப்படியாயினும் இராணுவ புலனாய்வு தகவல்கள், இராணுவத்துக்கு தனது பங்களிப்பை வழங்கத் தயார் நிலையிலிருந்த போதும் அவை அந்த வட்டத்துக்குள் வரவில்லை. 1987 ஜூலை 23 க்கும் பிறகு வெகு தாமதமாகித்தான் ஏற்றப்பட்ட காலாட்படை பிரிவின் (எம்.ஐ) உதவிப் பணிப்பாளர் நாயகம் ஒரு முறைசார உரையாடலின் போது ஸ்ரீலங்காவில் உள்ள இராணுவத்துடன் சாத்தியமான தொடர்புகளைக் கொண்ட எம்.ஐ யில் கடமையாற்றும் ஒரு மூத்த தமிழ் பேசும் அதிகாரியை பற்றி என்னிடம் தெரிவித்து, மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக தென்பிராந்திய இராணுவத் தளபதியை சந்திக்கும்படி கூறினார்.
எங்களது துருப்புகள் ஸ்ரீலங்காவில் இறங்கிய அந்த நாளில் நான் சென்னையில் உள்ள இராணுவத் தளபதியை சந்தித்தபோது, எங்கள் பங்கு சில நாட்கள் அல்லது சில வாரங்களே நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். உள்நாட்டு புலனாய்வு முகவர்கள் சோம்பேறிகளாகச் செயற்பட்டார்கள், தங்களது சொந்தக் காரணங்களுக்காக எங்களுடன் தகவல்களை பரிமாறுவதில் தயக்கம் காட்டினார்கள். உள்நாட்டு உளவுத்துறையினரின் போக்கு முன்னேற்றமடைவதற்கு இரண்டு வருட காலமும் சில ஆயிரம் இந்தியப் படைகளின் உயிரும் தேவையாக இருந்தது. அப்போது அது பயனற்ற களப் புலனாய்வாக இருந்தது. மறுபக்கத்தில் பங்களாதேஷைப் பொறுத்தமட்டில் அங்கு உள்நாட்டு மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவுகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்கூட்டியே வெகு தெளிவாக ஒருங்கிணைந்து பணியாற்றின.
வலுவான செய்தி
கணிக்கமுடியாத காரணங்கள் பல இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் இங்குள்ள பங்காளர்கள் யாவருக்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பியிருந்தது, இந்தியா அதன் மிக அருகில் உள்ள ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மூலோபாயமான முன்னேற்றங்களை ஒருபோதும் அலட்சியப் படுத்தாது, மற்றும் சமத்துவம் வேண்டி கோரிக்கை எழுப்பும் சிறுபான்மையினருக்கு தனது ஆதரவை வழங்கும் என்பதே அந்தச் செய்தி. அந்த உடன்படிக்கையின் மிகவும் முக்கியமான அணுகுமுறையாக, புதிதாக உருவாக்கப்பட்ட மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சி அதிகாரத்தை வழங்கும் விதமாக ஸ்ரீலங்காவின் அரசியலமைப்புக்கு 13வது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதே. மற்றும் தமிழர்களின் மனக்குறைகளுக்கு மாற்று மருந்தாக இப்போதும் கிடைக்ககூடியதாக உள்ள ஒரே அரசியலமைப்பு உபகரணம் இதுதான்.
ஒப்பந்தம் ஏற்பட்டு 25 வருடங்கள் கடந்த பின்னர் ,மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யை அதன் தலைவர் வி.பிரபாகரனுடன் சேர்த்து 2009ல் அழித்து மூன்று வருடங்கள் கழிந்த பின்னர், மாறிவிட்ட மூலோபாய சூழ்நிலைகளைப்பற்றி இரண்டு கேள்விகள் மனதில் எழுகின்றன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மூலோபாய இலக்குகளை பாதுகாத்ததா? இந்தியாவால் அதன் மூலோபாய நலன்களை பாதுகாப்பதற்காக, பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவில் பெற்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமா?
இந்த ஒப்பந்தம் அதன் மூலோபாய இலக்குகளை முற்றாக அணுகுவதில் தோல்வி கண்டுள்ளது. 13வது திருத்தம் இருந்தபோதிலும், ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது இன்னமும் நிறைவேற்றப்படாமலே உள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் அந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்குக்கு ஒரு கருவியான முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இரண்டாவது கேள்வியை பொறுத்தமட்டில் அதற்கான விடை, ஆம்,எங்களிடம் தேசிய மூலோபாயக் கட்டமைப்பை பற்றி முடிவெடுக்கும் திறன் உள்ளது, ஆயுதப்படைகள் அவதானிப்பான கண்காணிப்புகளை மட்டும் செய்து வந்தபோதிலும், உளவுத்துறையினரின் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் என்ன இந்தியாவிடம் இயக்கத்தன்மைமிக்க ஒரு தலைமைத்துவம் இல்லையே.
(தெற்காசியாவின் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை நிபுணரான கேணல்.ஹரிஹரன், இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் சேவையாற்றியபோது, புலனாய்வுத்துறை தலைவராக கடமையாற்றியுள்ளார்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்..
0 comments :
Post a Comment