Saturday, July 21, 2012

மட்டு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் எனது சகோதரியே சிறந்தவர் என்கிறார் கருணா.


மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தனது சகோதரியே சாலச்சிறந்தவர் எனக்கூறியுள்ளார் கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன். கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு இன்று காலை மட்டக்களப்பிலுள்ள சுபராஜ் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியை விட்டும் பிரிந்து சென்று தனித்து போட்டியிடுவதை நாம் குறையாக பார்க்க முடியாது' என்றும் கூறினார்.

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சி. அவர்களுக்கென்று கொள்கை இருக்கின்றது. அந்த வகையில் அவர்கள் பிரிந்து சென்று தனியாக போட்டியிடுகின்றனர். அதை நாம் குறையாக கூறமுடியாது. எனினும் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவார். கிழக்கு மாகாணம் பல்லின சமூகங்கள் வாழும் மாகாணம் என்பதால் இனத்துவேசமற்ற வகையில் திறமையான தகுதியான முதலமைச்சர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

எம்மைப்பொறுத்த வரைக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நிச்சயம் ஆளும் கட்சி வெற்றிபெறும். கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆளும் கட்சி 5 ஆசனங்களை பெறும். அந்த வகையில் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக வாக்களிக்க வேண்டும். பசப்பு வார்த்தைகளுக்கு அடியபணியக்கூடாது. எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்து எதையும் சாதிக்க முடியாது.

எமது வாக்கை சிதறடிக்காமல் ஆளும் கட்சிக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை ஆளும் கட்சியினுடாக தமிழ் மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாக்களித்தால் நிச்சயமாக மூன்று தமிழர்களை நாம் ஆளும் கட்சியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தகுதியான, திறமையான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அந்த வகையில் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த இந்த மாவட்டத்தற்கு கணினி கல்வித்துறையில் சேவையாற்றி வரும் ஹன்றி பெர்வோ மற்றும் சமூக சேவையாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்ட காலமாக இருந்து சேவையாற்றி வரும் மும்மொழியும் தெரிந்த இராஜன் மயில்வாகனம், 25வருடங்கள் ஆசிரியராகவும் அதிபராகவுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கல்விச் சேவையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவு தலைவியாக செயற்பட்டு வரும் எனது சகோதரி ருத்மலர் ஞானபாஸ்கரன் ஆகியோரை நாம் எமது கட்சியினூடாக வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

ஏனைய வேட்பாளர்களைவிட இவர்கள் சிறந்த வேட்பாளர்கள். மட்டக்களப்பின் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற்றுள்ள நிலையில் இன்று சிறந்த வேட்பாளர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் இம் மூவரையும் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அவரின் வழிகாட்டலில் சிறந்த முறையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 60000க்கு மேற்பட்ட மில்லியன் ரூபா பணங்களை செலவளித்து மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயம், கைத்தொழில், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடிதுறை இன்று அபிவிருத்தி கண்டுள்ளது.

எனவேதான் எதிர்காலத்திலும் நாம் ஆளும் கட்சியை ஆதரிப்பதன் மூலம் சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வன்முறையற்ற ஜனநாயக சுதந்திரமான தேர்தலாக அமையவுள்ளது.

இந்த தேர்தலை தமிழ் மக்கள் முழுமையாக பயன்படுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியையும் அதில் போட்டியிடும் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் மூவரையும் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் வேட்பாளர்களான ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவு தலைவி திருமதி ருத்மலர் ஞானபாஸ்கரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் மற்றும் ஹன்ரி பெர்வோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com