Friday, July 6, 2012

பாகிஸ்தானில் குரானை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை தீ வைத்து எரித்தார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத் தீ போன்று பரவியது. இதையடுத்து ஆத்திரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்ற அப் பகுதியினர் அந்த நபரை ஒன்று போலீசார் தங்கள் கண் முன் கொல்ல வேணடும், அல்லது தாங்கள் கொல்வோம் என்று கூறினர்.

அந்த நபரை வெளியே விட போலீசார் மறுத்தவுடன் அந்த கும்பல் காவல் நிலையத்தை தாக்கியது. இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரைத் தாக்கிவிட்டு அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் சென்றது. அவர் எந்த இடத்தில் வைத்து குர்ஆனை எரித்தாரோ அதே இடத்தில் அவரை நிற்க வைத்து அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமை அவமதித்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இது குறித்து போலீசார் கூறுகையில், குர்ஆனை எரித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் காவலில் இருக்கையில் தானாக பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார். அவரைப் பார்த்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார் என்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com