நேட்டோ படை தாக்குதல் ஆப்கனில் 61 தீவிரவாதி பலி
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை மற்றும் ஆப்கன் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 61 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை களையெடுத்து அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா தலைமையில் 1,30,000 நேட்டோ படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களோடு ஆப்கன் ராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கன் ராணுவமும் நேட்டோ படைகளும் நடத்திய அதிரடி தாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 61 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பக்லான், ஜாசான், பக்டிகா, காந்தகார் மற்றும் பரா ஆகிய மாகாணங்களில் ஆப்கன் போலீஸ், ராணுவம், உளவு துறையினர் மற்றும் கூட்டுப் படைகள் தீவிரவாதிகள் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் 61 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து 115 கிலோ போதைபொருள், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயன்படுத்தும் ஜாக்கெட்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் 61 தலிபான்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தலிபான்கள் உடனடியாக எதுவும் கூறவில்லை.
0 comments :
Post a Comment