திருமணவீட்டி விருந்து நஞ்சானதில் 500 பேர் வரையானோர் வைத்தியசாலையில் !!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியா புலை பள்ளியடிக் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தின்போது வழங்கப்பட்ட மதியநேர உணவு விஷமடைந்ததன் காரணமாக 426 போ் இதுவரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளா அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்திருமண வீட்டில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்கள் வயிற்று வலி, வயிற்றோட்டம், வாந்தி, மயக்கம் ஆகியன ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
உணவு விஷமடைந்ததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வார்ட்டுக்கு மாற்றப்பட்டுவருவதாகவும் வைத்தியர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸாரும் வவுணதீவுப் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment