இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற மையப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டோர் இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
பிரணாப்பிற்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன?
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பிரணாப் முகர்ஜிக்கு, மாதம் ஒன்றுக்கு, 1.5 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டில்லியில் உள்ள பிரமாண்டமான மாளிகையில் வசிக்கலாம். அவருக்கு உதவி செய்ய, மாளிகையில், 200 ஊழியர்கள் பணியாற்றுவர். அவர் ஓய்வெடுக்க, சிம்லா மற்றும் ஐதராபாத்தில் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் பறக்கலாம். வேண்டுமானால், குடும்பத்துடன் செல்லலாம். நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, பிரணாப் முகர்ஜி இராணுவத் துறையால் பதிவு செய்யப்பட்ட அம்பாசிடர் காரில் தான் பயணித்து வந்தார். இன்று முதல், அவர், மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். அதுதான், இனி அவரது அலுவலக கார். குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டது. அவர் பதவியில் இருக்கும்போது, இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும்.
ஜனாதிபதியாக பிரணாப் இன்று பதவியேற்ற நிலையில் டில்லி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லியில் உள்ள மத்திய தலைமை செயலகம், கான் சந்தை உத்யோக் பவன் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும்து, பிரணாப் பதவியேற்று முடிக்கும் வரை தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாகவும், மற்ற இடங்களில் வழக்கம் போல ரயில்கள் இயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment