மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரை நள்ளிரவில் வீதியில் விட்டுச்சென்ற ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வருகின்றனர். மேற்படி சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், தந்தையின் பாதுகாப்பில் மேற்படி சிறுமியும் அவரது 6 வயதான சகோதரர் ஒருவரும் இருந்துவந்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி மேற்படி சிறுமியின் தந்தை தனது தந்தையின் மரணச்செய்தி கேட்ட நிலையில், இரு சிறார்களையும் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மரண வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்றையதினம் இரவு 10 மணிக்கு வந்த மேற்படி சந்தேக நபர், மரண வீட்டிற்கு தான் செல்வதாகவும் இரு சிறார்களையும் தந்தையிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி இரு சிறார்களையும் அழைத்துச் சென்றுள்ளதாகவும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பின்புறத்தில் மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு இவர்களை வீதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மறுநாள் அதிகாலை வீட்டைச் சென்றடைந்த மேற்படி சிறுவர்கள், நடந்தவற்றை உறவினரிடம் கூறியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பெண்கள் உபபொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி திஸாநாயக்க தலைமையில் சார்ஜன் சபேசன், பொலிஸ் கொஸ்தா மனோகரன் ஆகியோர் இணைந்து தலைமறைவான சந்தேக நபரை தேடி வருகின்றனர்.
இதேநேரம் மட்டக்களப்பு வகரைப் பிரதேசத்தில் மனைவியை கணவர் கூரிய ஆயுதமொன்றினால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை கல்லறுப்பு வெருகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காளிகோயில் வீதி கதிரவெளியைச் சேர்ந்த பூரணம் நடராசா வயது (55) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாக இக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவிக்கின்றனர். இவரை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இராணுவத்தினரினால் எடுத்துச் செல்லப்படடபோது வழியில் உயிரிழந்துள்ளார்.
கொலைகாரர் தலைமறைவாகியுள்ளார் வாகரை பொலிசார் கொலைகாரரைத் தேடி வலைவிரித்துள்ளதாக பிரதேச பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.
அத்துடன் சிகிரியா குளத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் நீரில் முழ்கி முச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நாவலடி வீதி சந்திவெளியைச் சேர்ந்த குணநாதன் அச்சுதன் வயது (17) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை தம்புள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்பு தம்புள்ள பொலிசாரினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிகிரியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றிலே தொழில் புரியும் முகமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,
No comments:
Post a Comment