Thursday, June 7, 2012

சார்க் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறைவு - ஹிஸ்புல்லா

சார்க் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறைவாக உள்ளது என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாமண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுவர்கள் மற்றும் முதியோர்களை கௌரவிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,

'எமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.கடந்த ஒருமாதகாலத்திற்குள் தந்தை, மகளை பாலியல்துஷ்பிரயோகம் செய்த 3சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தந்தை, மகளை துஷ்பிரயோகம் செய்வது, ஆசிரியர் மாணவணை அல்லது மாணவியை துஷ்பிரயோகம் செய்வது, வளர்ந்த மாணவர்கள் இளையமாணவர்களை துஷ்பிரயோகம் செய்வது போன்றசம்பங்கள் இடம்பெறுகின்றன.

இவைகளை நாங்கள் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கின்றோம்.

யுத்தம் இருந்தகாலத்தில் ஊடகங்களில் யுத்த செய்திகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன. குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் கொலைச் சம்பவங்களுக்கும், மரணச் சம்பவங்களுக்குமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன.

ஆனால், இன்று யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் ஊடகங்களில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோக செய்திகளும் பெண்கள் துஷ்பிரயோக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை சட்டத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. விழிப்புணர்வு அவசியமாகும். இதைமக்கள் மத்தியில் அறிவூட்டல் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு இதன்பாதிப்புக்கள் குறித்து அறிவூட்டல் செய்து இதிலிருந்து நமது சிறுவர் சமூகத்தை பாதுகாக்கவேண்டும்.

இன்று எங்களது அமைச்சினால் சிறுவர் உத்தியோகத்தர்கள், மகளிர் உத்தியோகத்தர்கள் என்போர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டும் இந்த விழிப்புணர்வு வேலைகளை செய்யமுடியும்' என்றார்.

இதன் போது காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவு இணைந்து சிறுவர்கள் முதியோர்களை கௌரவித்ததுடன், பிறை மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேசசெயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com