எந்தவொரு அவசர நிலைமைகளிலும் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் , இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ உறுதியளித்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் சீன இராணுவத் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதுடன்,சீன இராணுவத்துக்கு போருக்கு பிந்திய விடயங்கள் குறித்து பயற்சியளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்ததுடன், சீனா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இராணுவத் தளபதியுடன் 11வது டிவிசன் தளபதி பிரிகேடியர் குணவர்த்தன, இராணுவ அகடமியின் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சீனா சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment