Monday, June 18, 2012

சட்டவிரோதமாக குடியேறினாலும் திறமையுள்ள இளைஞர்கள் அமெரிக்காவில் தங்கலாம்! - ஒபாமா

சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருந்தாலும், திறமையுள்ள இளைஞர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கலாம், என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க குடியேற்றத்துறை வரலாற்றில் இது புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமா அமெரிக்காவில் குடியேறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களைக் கணக்கெடுத்து, அனைவரையும் வெளியேற்றப் போவதாக ஆரம்பத்தில் அதிபர் ஒபாமா முன்பு அறிவித்திருந்தார்.

ஆனால், அதிபர் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். வாஷிங்டனில் நேற்று நடந்த கூட்டத்தில், திறமையான இளைஞர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் தங்கலாம் என்று கூறியுள்ளார்.

முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர் பாரக் ஒபாமா ஆணையிட்டுவிட்டார்.

ஒபாமாவின் இந்த அறிவிப்பு பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரம், குடியரசுக் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். அதிபரால் வழங்கப்பட்ட 'பொது மன்னிப்பு' என்றே இதனை அவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை அதிபர் பறித்துவிட்டார் என்றும் சாடியுள்ளனர். அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குகளைக் குறிவைத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த ஒபாமா 'படித்த, திறமையுள்ள, அமெரிக்கா மீது பற்றும் பாசமும் கொண்ட, நாட்டு நலனில் அக்கறை காட்டி உழைக்கிற இளைஞர்களை 'குடியுரிமை இல்லை' என்ற ஒரே காரணத்துகாக வெளியேற்றுவது சரியில்லை.

அமெரிக்க தேசிய நலனுக்கும் பொது நலனுக்கும் ஊறுவிளைவிக்காத, ஊறு விளைவிக்க நினைக்காத நல்ல இளைஞர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். இது பொது மன்னிப்பல்ல, தாற்காலிக நிவாரணம்தான்," என்றார் ஒபாமா.

No comments:

Post a Comment