Tuesday, June 12, 2012

எரிபொருளின் விலை குறைவதால் கிடைக்கும் நன்மைகளை மக்களும் பெறுவர்

உலக சந்தையில் எரிபொருளின் விலை மட்டம் குறைவதால் கிடைக்கக்கூடிய அனுகூலங்களை நாட்டு மக்களுக்கு வழங்குவது பற்றி இலங்கை அரசாங்கம் தற்போது கூடிய கவனம் செலுத்தியிருக்கிறது.

அடுத்து வரும் வாரங்களில் உலக சந்தையில் எரிபொருள் மட்டம் மேலும் குறைவடைவதன் அடிப்படையில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 6 ரூபா 15 சதமும், டீசலுக்கு 9 ரூபா 24 சதமும், மண்ணெண்ணெய்க்கு 6 ரூபா 84 சதமும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளும் நிவாரண முறையில் வழங்கப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரான் மீதான எண்ணெய்த் தடையில் இருந்து இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளது.

இலங்கை, இந்தியா, மலேசியா, கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, தாய்வான் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யும் எரிபொருளின் அளவு கணிசமாக குறைந்ததால் விலக்களிப்பு வழங்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி கடந்த ஆண்டு கடைசிப் பகுதியில் ஈரானின் மத்திய வங்கியையும் நிதித்துறையையும் உள்ளடக்கும் வகையில் அமெரிக்க தடைகளை விஸ்தரிக்கக்கூடிய சட்டமூலத்தை அங்கீகரித்தார்.இந்த சட்டமூலம் ஈரானிய மத்திய வங்கியுடன் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு வங்கிகள் மீது தடைவிதிக்க அனுமதி அளித்தது.

No comments:

Post a Comment