லிபியாவின் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கடாபியின் உயிருடன் உள்ள மகன் லிபியாவில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளது அமெரிக்கா. நெதர்லாந்தில் உள்ள இன்டர்நேஷனல் கோர்ட், அவரை விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறது.
கடாபி கொல்லப்பட்டபின், கடாபியின் மகன் சாய்ஃப் அல்-இஸ்லாம் கடாபி உயிருடன் பிடிபட்டார். லிபியாவின் புதிய அரசு தற்போது அவரை கைதியாக அடைத்து வைத்திருக்கிறது. அவர் லிபியாவில் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்பது லிபிய அரசின் நிலைப்பாடு. அவர் செய்தது உலக அளவிலான போர்க் குற்றம் என்பதால், தம்மால் விசாரிக்கப்பட வேண்டும் என்பது, சர்வதேச கோர்ட்டின் கோரிக்கை.
நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா. தற்போதும், உலக அளவில் நடைபெறும் போர்க்குற்றங்கள் அங்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதும் அமெரிக்காவின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால், கடாபியின் மகன் விஷயத்தில், விதிவிலக்கான முடிவு ஒன்று அமெரிக்காவால் எடுக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணைக் கமிட்டிக்கான அமெரிக்க தலைவர் ஸ்டீஃபன் ராப், “கடாபியின் மகன் லிபிய தலைநகர் ட்ரிபோலியில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதையே வாஷிங்டன் விரும்புகிறது. காரணம், அவர் செய்த குற்றங்களுக்கு தேசிய அளவிலான தண்டனையே சரியாக இருக்கும். குறைந்தளவு தேவைகளுடன் கூடிய விசாரணையாக அது இருக்கும். ஆனால், குற்றத்துக்கு சரியான தண்டனை துரிதமாக வழங்கப்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றில் பல விஷயங்கள் மறைந்திருப்பதை கவனித்தீர்களா?
‘குறைந்தளவு தேவைகளுடன் கூடிய விசாரணை’ என்று கூறப்படுவது, முக்கியமானது. இந்த விவகாரம் சர்வதேச கோர்ட்டுக்கு போனால், குற்றத்தை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள், தடயங்கள், சாட்சிகள் எல்லாம் தேவை. சாட்சிகள் அனைவரும் அல்-இஸ்லாம் கடாபியின் வக்கீல்களால் கடுமையாக குறுக்கு விசாரணை செய்யப்படலாம்.
ஆனால், லிபிய சிஸ்டம் இவ்வளவு கடினமானது அல்ல. லிபியாவுக்கு உள்ளே விசாரணை நடந்தால், கடாபிக்கு ஆதரவாக சாட்சி சொல்ல யாரும் துணிய மாட்டார்கள். கால தாமதமின்றி வழக்கு முடிந்து போகும். தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்காவின் ஆர்வத்துக்கான மற்றொரு விஷயம், இன்டர்நேஷனல் கோர்ட்டில் அதிகபட்ச தண்டனை, ஆயுள் தண்டனைதான். லிபிய கோர்ட்டில் மரண தண்டனை உண்டு. சதாம் உசேன் ஏன் இன்டர்நேஷனல் கோர்ட்டில் விசாரிக்கப்படாமல், ஈராக்கில் விசாரிக்கப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலும் அதுவே.
No comments:
Post a Comment