எகிப்து முன்னாள் ஜனாதிபதி முபாரக் கோமா நிலையில் - எகிப்திய இராணுவம்
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், கோமா நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளாக எகிப்தில் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தவர் 84 வயதுடைய ஹோஸ்னி முபாரக். இவரது ஆட்சியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்றவை அதிகரித்ததால், முபாரக்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு, தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இவ்விவகாரத்தில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தலையிட்டதை அடுத்து, ஜனாதிபதி பதவியில் இருந்து முபாரக் கடந்தாண்டு பெப்ரவரியில் விலகினார். முபாரக் ஆட்சியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 800 பேர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முபாரக்குக்கு, கடந்த 2ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முபாரக்கின் மகன்மார் ஆலா மற்றும் கமால் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட முபாரக், அடிக்கடி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் யூரா சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் கோமா நிலைக்கு சென்றதால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, எகிப்து நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
முபாரக்கின் இதய துடிப்பு நின்று விட்டதாகவும், செயற்கை முறையிலும் அது வேலை செய்யவில்லை. தற்போது செயற்கை சுவாசம் கொடுப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக அந்த 'டிவி' செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எகிப்தில், கடந்த 16 மற்றும் 17ம் தேதி நடந்த, ஜனாதிபதி தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெற்றது என்பதை ராணுவ ஆட்சியாளர்கள் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடாமலும், இறந்து விட்ட முபாரக் உயிரோடு இருப்பதாகவும், ராணுவ ஆட்சியாளர்கள் கூறுவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment