யாழ் வைத்தியசாலைப் பணிப்பாளர் அடாவடி. இருந்த வைத்தியர் இடமாற்றம். வந்த வைத்தியர் புறக்கணிப்பு
யாழ்ப்பாண வைத்தியசாலையின் பணிப்பாளரின் அடாவடித்தனம் அதிகமானதை அடுத்து அங்கு பணிபுரியும் வைத்தியர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக் கட்டிடத்திற்காகக் கொண்டு வரப்பட்ட இரும்புக் கேடர்கள், மின்பிறப்பாக்கி மற்றும் வேறுசில பொருட்களும் ஆஸ்பத்திரி வளாகத்திலிருந்து முறையற்ற விதத்தில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனைச் சுட்டிக் காட்டியதையடுத்து யுத்தகாலத்தின்போது சிரமங்களின் மத்தியிலும் பணியாற்றிய வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் ஒருவர் கொழும்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மாற்றத்தைக் கோராத இந்த வைத்தியர் இடமாற்றப்பட்டதன் பின்னணியில் வைத்தியசாலைப் பொருள்கள் கையாடப்பட்டதே காரணமெனத் தெரிய வருகிறது.
இதேவேளை யாழ் வைத்தியசாலைக்கென இடமாற்றப்பட்ட சத்திரசிகிச்சை நிபுணரொருவர் அங்கு சத்திர சிகிச்சைக் கூட வசதிகள் போதாதெனக் காரணங்காட்டி வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் தற்போது நவீன சத்திர சிகிச்சைக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இவை இயங்கத் தொடங்கியதும் அனுபவமுள்ள சத்திர சிகிச்சை நிபுணர்கள் தேவையெனவும் இங்கு பணி புரியும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 comments :
Post a Comment