Thursday, June 21, 2012

லீக் தகவல்: செய்தியாளர்களை உளவாளிகளாக பயன்படுத்திய உளவுத்துறை!

நெதர்லாந்தின் உளவுத்துறை தமது நாட்டு செய்தியாளர்களை உளவாளிகளாக பயன்படுத்தியது தொடர்பாக லீக் செய்யப்பட்ட தகவல் ஒன்று, உலக அளவில் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை லீக் செய்திருப்பது நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் பிரபல டச் மொழி பத்திரிகையான De Telegraaf.

நெதர்லாந்தின் ஸ்போர்ட்ஸ் மீடியாவைச் சேர்ந்த செய்தியாளர்களையே அந்நாட்டு உளவுத்துறை, உளவு வேலைகளுக்காக பயன்படுத்தியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சீனாவில் நடைபெற்ற போது, நெதர்லாந்து டீமுடன் சென்றிருந்த செய்தியாளர்கள் சீனாவுக்குள் உளவு வேலைகளை பார்த்துவிட்டு திரும்பினார்கள் என்பதே, De Telegraaf பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி.


டச் பத்திரிகை ஏற்படுத்திய பரபரப்பு!

நெதர்லாந்து உளவுத்துறைக்கு பெயர் AIVD (Algemene Inlichtingen- en Veiligheidsdienst). 2008 கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக சீனா சென்ற ஸ்போர்ட்ஸ் செய்தியாளர்களை முன்கூட்டியே தொடர்புகொண்ட இவர்கள், தமது உளவாளிகளாக செயல்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

அதையடுத்து, அவர்களுக்கான ஊதியம் பேசப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்தியாளருக்கும் நுணுக்கமான சில உளவு பார்க்கும் கருவிகள் வழங்கப்பட்டன. உளவு பார்க்கும் விஷயத்தில் 1 மாத பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு சென்ற செய்தியாளர்கள், AIVD கேட்டுக் கொண்டபடி உளவு வேலைகளில் ஈடுபட்டு தகவல்களை திரட்டி வழங்கியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் என்ற போர்வையில் இவர்களால் மற்றைய உளவாளிகளால் ஊடுருவ முடியாத இடங்களில் ஊடுருவ முடிந்திருக்கிறது. முக்கிய போட்டோக்களையும் எடுத்து வழங்கியுள்ளார்கள்.

இந்த டீமுடன் சென்ற De Telegraaf பத்திரிகையின் ஸ்போர்ட்ஸ் நிருபர், உளவு வேலை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதையடுத்து, உளவுத்துறை அவரை வற்புறுத்தவில்லை.

இந்த தகவல் வெளியாகி, உலக மீடியா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து அரசு மீது மீடியா உலகம் குற்றச்சாட்டுகள் முன்வைக்க துவங்கியுள்ளன. நெதர்லாந்து உளவுத்துறையை உலக மீடியாக்கள் பல மொய்க்கத் துவங்கவே, உளவுத்துறை தலைவர் ராப் பர்தோலி வாய்திறக்க வேண்டியதாகி விட்டது.

AIVD தலைவர் ராப் பர்தோலி, “நாட்டின் தேசிய உளவுத்துறை என்ற ரீதியில் நாம் யாரையும் எமது பணியில் சேர்த்துக் கொள்ளும் வசதியும், உரிமையும் உள்ளது. உளவு வேலைகளுக்கு தகுதி உடைய யாரையும், நாம் எமது பணியில் ஈடுபடுத்துவோம்” என பொதுவான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், குறிப்பிட்ட சம்பவத்தில் (2008 கோடைகால ஒலிம்பிக்ஸ்) செய்தியாளர்களை உளவாளிகளாக பயன்படுத்தியது குறித்து ஏதும் சொல்ல மறுத்துவிட்டார். “நாம் வழங்கும் உளவு அசைன்மென்ட்கள் பற்றி வெளியே விவாதிப்பதில்லை” என்பதுடன் வாயை மூடிக் கொண்டார் AIVD தலைவர் ராப் பர்தோலி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com