சில வாரங்களுக்குமுன், இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. கைது செய்யப்பட்டவர், கேரளாவில் வைத்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ராணுவ ரகசியங்களை விற்றார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இப்போது, ‘நிஜமான’ விவகாரம் வேறு என்று சொல்கிறார்கள்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி வி.கே.சிங்குக்கும், அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த இழுபறி ஒன்றில்தான், ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் சிக்கிக் கொண்டார் என்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவரின் பெயர், ஹவில்தர் ஷிவ்தாசன். தற்போது தென் பிராந்திய ராணுவத் தலைமை அலுவலக சிறையில் உள்ளார். ராணுவத் தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றபின், இரு தினங்களுக்கு முன், என்ன நடந்தது என்று இவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அப்போதுதான், இதெல்லாம் ‘உள் விவகாரம்’ என்று தெரியவந்துள்ளது.
ஷிவ்தாசன் கேரளாவைச் சேர்ந்தவர். ராணுவ ரகசியங்களை இவர், வளைகுடா நாடு ஒன்றில் பணி புரியும் தமது உறவினர் ஒருவர் ஊடாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு விற்றார் என்று கூறியே அவரைக் கைது செய்திருந்தனர். திருவனந்தபுரத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் எந்த ரகசியமும் இருக்கவில்லை.
அதற்கு முன்னரே ரகசியம் அடங்கிய சி.டி. கைமாறி விட்டது என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் ஷிவ்தாசன் கைதுக்குப் பின், அந்த விவகாரம் பற்றி வேறு எந்த பேச்சும் இல்லை. திடீரென அனைத்தும் ஹாஷ் ஹாஷ் ரகசியமாகின. ஷிவ்தாசனை மட்டும் வெளியே விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
இப்போது தெரிய வந்துள்ள தகவலின்படி, ஷிவ்தாசனிடம் ராணுவ ரகசியங்களை வாங்கிய நபரே, இந்திய ராணுவத்தின் Technical Support Division (TSD) பிரிவில் உள்ள ஒரு கர்னல் என்று தெரியவருகிறது. TSD பிரிவு, தற்போது ஓய்வு பெற்றுள்ள தளபதி வி.கே.சிங்கினால் உருவாக்கப்பட்டது. வி.கே.சிங்கின் நம்பிக்கைக்குரிய கர்னல் ஹனி பாக்ஷிதான் அதன் தலைவர்.
இந்தப் பிரிவு, ராணுவத்துக்கு உள்ளேயே சில உளவு வேலைகளைப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதாவது, ராணுவ அதிகாரிகளில், வி.கே.சிங்குக்கு எதிரணியில் இருந்த சிலரது போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக காற்றுவாக்கில் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
கைது செய்யப்பட்ட ஷிவ்தாசன், அந்தப் பிரிவில் பணியாற்றியவர். ராணுவத்தில் இருந்த மற்றொரு கர்னல் தர அதிகாரி, ஷிவ்தாசனிடம் ஒரு டீலை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது இலாகாவுக்குள் நடக்கும் சில விஷயங்களை கொடுத்தால், பணம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
ரகசியங்கள் எதற்கு என்று கேட்டபோது, கர்னல் ஹனி பாக்ஷி ராணுவத்துக்குள் செய்யும் உளவு பார்த்தல்களை அம்பலப்படுத்த என்று கூறப்பட்டிருக்கிறது. அதையடுத்து ஷிவ்தாசன், இவர்கள் கேட்ட விபரங்களை ஒரு சி.டி.-யில் பதிவு செய்து வைத்தார். ராணுவத்தைச் சேர்ந்த இருவர், ஷிவ்தாசனை திருவனந்தபுரத்தில் சந்தித்து சி.டி.-யை பெற்றுக் கொண்டனர்.
TSD பிரிவு இயங்குவதே, ராணுவ உளவுத்துறைக்கு உள்ளேதான். இதனால், அவர்கள் இந்த சி.டி. கைமாறலை தெரிந்து கொண்டு விட்டார்கள். ஷிவ்தாசனையும் கைது செய்தார்கள். ஆனால், நிஜமான காரணத்தை கூறுவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், ‘பாகிஸ்தான் உளவாளி’ என்ற கதை ஜோடிக்கப்பட்டது.
ராணுவத் தளபதி வி.கே.சிங்குக்கு எதிரான ஆட்களுக்கு சி.டி. கொடுக்கப்பட்டதால், அதைக் கொடுத்த ஷிவ்தாசனை கைது செய்த குரூப், வி.கே.சிங்கின் ஆதரவு குரூப் என்று ஊகிக்கலாம்.
தற்போது, தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றபின், இந்த விஷயம் வெளியே கசிந்திருக்கிறது… அவர் பதவியில் இருந்தபோதுதான் சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டிருந்தார். இப்போது ஓய்வு பெற்ற பின்னரும், சர்ச்சைகள் ஓயப்போவதில்லை போலிருக்கே!
No comments:
Post a Comment