இலங்கையில் தேசிய அடையாள அட்டையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. இது இலங்கையில் மிகவும் முக்கியமான, தனி நபருக்குரிய சட்ட ரீதியான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்குப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அவசியம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி.ஏ.ஆர்.தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளார்கள்.
அங்கிருந்த அரச அலுவலகங்களும் யுத்த காலத்தில் தீமூட்டப்பட்டும் மோதல்களிலும் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த அலுவலகங்களில் இருந்து தமக்குரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும் முடிந்த அளவில் தொலைந்து போன பிறப்பத்தாட்சிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவப்பிரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு கெடுபிடிகளின்போது மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக தேசிய அடையாள அட்டையே உள்ளது.
இலங்கையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு, வெளிநாட்டுப் பயணத்துக்கான கடவுச் சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு, வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதற்கு, திருமணத்தைச் சட்ட ரீதியாகப் பதிவு செய்வதற்கு, குழந்தைப் பிறப்பை பதிவு செய்வதற்கு தேசிய அடையாள அட்டை அவசியமாகியுள்ளது.
யுத்தகாலத்தில் குறிப்பாக தலைநகர் கொழும்பு, மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இனச்சிறுபான்மை மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளின்போது, மக்கள் தமது அடையாளத்தை உறுதி செய்வதற்கு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணமாக தேசிய அடையாள அட்டையே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாதிருப்பதாக என பஃப்ரல் என்ற சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
(தமிழோசை).
No comments:
Post a Comment