வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்கள் இம்மூன்று மாகாண முதலமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் பிரகாரம், மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், இவ்வாறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் நேற்று இது தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டனர். அரசியல் யாப்பு சட்டத்தின் பிரகாரம், மாகாண சபையொன்று கலைக்கப்பட்டு, மூன்று மாத காலத்தினுள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதன் பிரகாரம், செப்டெம்பர் மாதம் இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுமென, எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அனைத்து மாவட்ட தேர்தல்கள் அதிகாரிகளுக்கான கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவினால் குறித்த தேர்தல் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பாக, முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும், தேர்தல்கள் திணைக்கள வட்டார அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்றைய பேச்சுவார்த்தை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தலைமையில் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தேர்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும், கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment