Monday, June 25, 2012

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முடிவில் மாற்றம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முடிவை அரசாங்கம் கைவிட்டுள்ளது. நாட்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.

அத்துடன் பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது.

இந்நிலையிலேயே பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவின் உதவியின்றி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ண உறுதிப்படுத்தியுள்ளார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சே மேற்கொள்ளவுள்ளது எனவும், இது வணிக மற்றும் இலங்கை விமானப்படையின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment