Friday, June 22, 2012

அமெரிக்க தமிழ்த் திருவிழாவில் இடம் பெறப் போவன?

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) என்பதாகும். வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழாவாக வெகுப் பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும் விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்ற ஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளி விழாவானதுமுனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

”தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.

வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை.செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலா பால் மேடை நிகழ்ச்சி, திரைப்பட நடிகையும் சின்ன திரைக் கலைஞருமான பிரியதர்ஷினி நாட்டியம், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டா பெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.

இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.

விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதள முகவரி: www.fetna.org

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள் பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370 .

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பொற்செழியன் 314 249 0706 நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் இடம் பெறும் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க,திரு.கொழந்தைவேல் இராமசாமி

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர், திரு.கார்த்திகேயன்தெய்வீகராசன். ’இதயங்கள் இயங்கட்டும்’ எனும் தலைப்பிலான கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்பு கொள்ள: 860 212 2398

‘விஜய் டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக் கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா. மனோகரன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 267-421-2891

கூடுதல் தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, 843-814-7581 திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளி விழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012 ஒரு கண்ணோட்டம் காணொலியில்...

தமிழால் இணைவோம்!
செயலால் வெல்வோம்!!


பணிவுடன்,
பழமைபேசி.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com