Friday, June 8, 2012

வடமேல் மாகாண செய்திகளின் தொகுப்பு

குருநாகல் மாவட்டத்தில் நாய் கடித்தல் அதிகரிப்பு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து பாதைகளில் நாய்க் கூட்டம் நடமாடுவதுடன் பாதைசாரிகளையும் மோட்டார் சைக்கில்களில் செல்வோரை கடித்து மக்களின் உயிருக்கு ஆபத்து விளைப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதையில் நடமாடும் கட்டாக்காலி நாய்கள் காரணமாக அதிகளவில் நாய் கடிக்கு உள்ளாகுபவர்கள் மோட்டார் சைக்கில் , துவிச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாட்களாக அளவ்வ, வாரியப்பொல, ஹிரிபிடிய, தம்பதெனிய, நாரம்மல ஆகிய பிரதேசங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதுடன், துவிச்க்கர வண்டி, மோட்டார் சைக்கில் ஆகிய வற்றில் பயணம் செய்தோரை கூடுதலாகக் கடித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குருநாகல் நகரில் கால் நடைகள் பிடிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

சமீப காலமாக குருநாகல் நகரில் கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும்,இது நகரமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக உள்ளது எனவும், இதனைக் கருத்திற் கொண்டு அந்தக் கால் நடைகளை பிடித்து கால் நடை உரிமையாளரிடம் தண்டப் பணம் அறவிடும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும் குருநாகல் மாநகர சபை முதல்வர் காமினி பெரமுனகே தெரிவித்தார்.

நகருக்குள் வரும் கால் நடைகள் பாதை விபத்துக்கள் மூலம் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த நகருக்குரிய அழகின் தன்மை மதிப்பு என்பன இல்லாமற் போய் விடும் எனவும், பிடிபடும் கால் நடைகளின் உரிமையாளர்கள் முன் வரா விட்டால் அவைகள் பண்ணைகளுக்கு வழங்கப்படும் அல்லது ஏலத்தில் விடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் பாதைகளை நவீனப் படுத்த 9861 மில்லியன் நிதி

வடமேல் மாகாணத்தில் பாதைகளை நவீனப் படுத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 9861 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.

இந்த நிதியில் வடமேல் மாகாணத்தில் 482 கிலோ மீட்டர் தூரம் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கூடுதலான நிதி பாதை அபிவிருத்திற்காக தம்பதெனிய தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 860 மில்லியன் ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை

வடமேல் மாகாண சமூக சேவை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகார கிராமிய கைத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ், மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சி பெறும் சகல மாணவர்களுக்கும் இலவச சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 56 பயிற்சி மத்திய நிலையங்களில் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களிலும் 450 மாணவர்கள் கற்கின்றனர்.

தும்பு உற்பத்தி, தச்சு வேலை, மட்பாண்ட உற்பத்தி, கல் வெட்டு போன்ற பிரிவுகளில் இந்த மத்திய நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இந்தச் சீருடைகள் வழங்க வடமேல் மாகாண சமூக சேவை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு மகளீர் விவகார கிராமிய கைத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் குணதாச தெஹிகம நடவடிக்கை எடுத்துள்ளார்.

செய்தி:-இக்பால் அலி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com