Friday, June 15, 2012

சம்பந்தனின் கருத்து தொடர்பில் ஏனைய கட்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் -கெஹெலிய

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அண்மையில் மட்டக்களப்பில் நடை பெற்ற மாநாட்டில் அரசியலமைப்பை மீறி தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில், ஏனைய கட்சிகள் விரும்பினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அக் கட்சிகளின் உரிமையில் தாங்கள் தலையிடப் போவதில்லை எனவும், அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், சம்பந்தன் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான கருத்து வெளியிட்டுள்ளார்.சம்பந்தன் அரசியலமைப்பை மீறி தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும் என தெரிவித்த ரம்புக்வெல்ல, சம்மந்தன் அரசியலமைப்பை மீறி தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர்களுக்கு இருக்கின்ற சட்ட உரிமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதுடன் அன்நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளும் கட்சியில் சுதந்திரக் கட்சி பிரதான கட்சியாக இருந்தாலும் ஏனைய கட்சிகளின் உரிமையில் கைவைக்கமாட்டோம் என குறிப்பிட்ட அமைச்சர் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படவேண்டும் என கட்சி ஒன்று முன்னர் வழக்கு தாக்கல் செய்தது. அதற்கான தீர்ப்பும் கிடைத்தது. அதில் அரசாங்கம் தலையிடவில்லை என தெரிவித்தார்

மேலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற விடயங்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளோம். அந்த தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துவிட வேண்டும் என்று முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். ஆனால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றுமா என்பதுபற்றி உறுதியாக தெரியவில்லை என தெரிவித்த அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டத்தில் தெரிவுக்குழுவுக்குள் இணையபோவதாகவும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் வரமாட்டோம் என்றும் கூறிவருகின்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment