Saturday, June 30, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள். சந்ரு

கிழக்கு மாகாணசபை கலைக்கப் பட்டிருக்கின்றது. வேட்புமணுத் தாக்கல் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர் வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தாங்கள் ஆட்சியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத் தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன். தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?

இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர் இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும் போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல் கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?

தொடரும்.....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com