நித்தியானந்தா மீண்டும் கைது.
ஜாமீனில் விடுதலையான நித்தியானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டு, மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 7-ந் தேதி நடந்த மோதல் தொடர்பாக, நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது 2 வழக்கும், கன்னட அமைப்பினர் மீது 3 வழக்கும் போலீசார் பதிவு செய்தார்கள். நித்தியானந்தா சீடர்களும், கன்னட அமைப்பை சேர்ந்தவர்களுமாக 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
நேற்று முன்தினம் மதியம், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென ராமநகர் மாவட்ட கோர்ட்டில் ஆஜரான நித்தியானந்தா, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை மறுநாள் (நேற்று) ஒத்தி வைத்த நீதிபதி கோமளா, வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
போலீஸ் விசாரணை
அதனைதொடர்ந்து, கோர்ட்டை விட்டு வெளியே வந்த நித்தியானந்தாவை போலீசார் கைது செய்து சென்னபட்னாவிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.
நேற்று காலை கோர்ட்டில் நித்தியானந்தாவை ஆஜர்படுத்துவதாக இருந்தது. ஆனால் காலையில் நித்தியானந்தாவை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.
வக்கீல்கள் வாதம்
பிற்பகல் 3 மணியளவில் நித்தியானந்தாவை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
நீதிபதி கோமளா முன்னிலையில் நித்தியானந்தா ஆஜர்படுத்தப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் மோகன்குமார், ``நித்தியானந்தாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது. ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்'' என்று வாதாடினார்.
நித்தியானந்தாவிற்கு ஜாமீன்
நித்தியானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் முத்து மல்லைய்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோமளா, நித்தியானந்தா மீதான 2 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
சிரித்தபடி வந்தார்
போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் பலத்த பாதுகாப்புடன் நித்தியானந்தாவை கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அப்போது நித்தியானந்தா சிரித்த முகத்துடன் அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து கைகூப்பி வணங்கியபடி வந்தார்.
பாதுகாப்பு பிரச்சினை கருதி நித்தியானந்தா தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
மீண்டும் கைது
ஆனால், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆசிரமத்தில் நடந்த மோதல் எதிரொலியாக, நித்தியானந்தாவிற்கு எதிராக கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தால், மாநிலம் முழுவதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக நித்தியானந்தா மீது ராமநகர் போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக ஜாமீனில் வெளியே வந்த நித்தியானந்தாவை பிடதி போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
நீதிமன்ற காவல்
அவர், பலத்த பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலெக்டரும், மாவட்ட நீதிபதியுமான ஸ்ரீராம்ரெட்டி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அவரை மைசூர் சிறைக்கு போலீசார் கொண்டு சென்று அடைத்தனர்.
கலெக்டர் தனக்குள்ள நீதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி, நித்தியானந்தாவை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அவர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மனு மீது கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
இதற்கிடையே, நித்தியானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வன்முறையாளர்களால் தனது ஆசிரம சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அதற்கு 10 கோடி ரூபாய் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த இழப்பீட்டை முதல்-மந்திரி சதானந்த கவுடா, ராமநகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி, உதவி கலெக்டர் அர்ச்சனா, போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால், பிடதி போலீசார் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment