Tuesday, June 26, 2012

இனப்பிரச்சனைத் தீர்வைக் குழப்புவதில் மீண்டும் கைகோர்த்துள்ள ஐ.தே.க.யும், த.தே. கூட்டமைப்பும்!

இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்கு மிடையிலான போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட போதிலும்,அப்போர் உருவானதிற்கு மூலகாரணமாக அமைந்த இனப்பிரச்சினைக்கு இன்னமும் ஒரு தீர்வுகாணப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. அதற்கான காரணத்தைத் தேடுபவர்கள் அரசாங்கத்தின் மீது மட்டுமே விரலை நீட்டுகின்றனர். சாதாரண மக்கள் அவ்வாறு அரசாங்கத்தைக் குறைகூறுவதில் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏனெனில் அரசு பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்து இந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த போது, மக்களுக்குச் சொல்ல முடியாத இழப்புகள் ஏற்பட்ட போதும், யுத்தம் முடிவுக்கு வந்தால் நிம்மதியான ஒருவாழ்க்கை கிடைப்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வும் கிடைக்கும் என மக்கள் நம்பினர். அரசாங்கமும் அவ்வாறான ஒரு நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி வந்தது. அதாவது 13வது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும,; அவரது சிரேஸ்ட அமைச்சர்களும் கூறி வந்தனர்.

ஆனால் இதுவரை அந்தத் திசையில் அரசாங்கம் ஒரு சிறு நகர்வைத்தன்னும் மேற்கொள்ளாததால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளமை இயல்பே.

இந்த விடயத்தில் அரசாங்கம் சிங்களப் பேரினவாத அடிப்படையில் செயல்பட்டு தமிழரை ஒடுக்க முயல்வதாலேயே, இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடித்து வருகிறது எனத் தமிழர் தரப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அரசாங்கம் இதைத் திட்டவட்டமாக மறுப்பதுடன், பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரும்படி பிரதான தமிழ் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்து வருகிறது. முதலில் அந்த அழைப்பை ஏற்கப் பிடிவாதமாக மறுத்த தமிழ் கூட்டமைப்பு, பின்னர் தனது நிலைப்பாட்டில் ஒரு நெகிழ்வைக் காட்டுவது போலப் பாசாங்கு செய்தது. அதன்பின்னர் 'மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை'யாகப் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது.

உண்மையில் இனப்பிரச்சினைத் தீர்வில் அரசாங்கம் இதயசுத்தியுடன் உள்ளதா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது. ஏனெனில் அமையவிருந்த தெரிவுக்குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அதன்படி பார்த்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமின்றி, அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தேசிய முஸ்லீம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி. சமசமாஜக்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்ற கட்சிகளும் நியாயமானதொரு இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நின்றிருப்பார்கள்.

அதுமாத்திரமின்றி, பிரதான அரசாங்கக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், போலியான முறையில் தமிழர் ஆதரவு காட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட ஏதாவது ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருந்திருக்கும். இந்த நிலைமையில் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு சர்வசதா சிங்கள இனவாதம் பேசிவரும் ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பனவும், வெளியே இருந்துகொண்டு இனவாதம் பேசிவரும் ஜே.வி.பி, சரத் பொன்சேகா போன்றோரும்தான் ஒரு சிறுபான்மையினராக தீர்வு முயற்சிகளை எதிர்ப்பார்கள்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் பிரச்சினை தீர்வதில் அக்கறை இருக்குமாக இருந்தால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றி, அங்கு இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காண்பதில் அக்கறையுள்ள கட்சிகளுடன் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்கி, தீர்வு முயற்சிகளுக்கான புதிய கதவுகளைத் திறந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது தமிழ் கூட்டமைப்பின் இதயசுத்தியை எடுத்துக்காட்டுவதுடன், அரசியல் சாணக்கியம் மிகுந்ததாகவும் இருந்திருக்கும். ஆனால் கூட்டமைப்பு அப்படிச் செய்யவில்லை. செய்ய விரும்பவில்லை என்பதே உண்மையாகும்.

உண்மையில் கூட்டமைப்பு எதை விரும்புகிறது? அது தன்னுடன் மட்டும் அரசாங்கம் பேசிஇனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என விரும்புகிறது. அதன் மூலம் ஒரேநேரத்தில் பல இலக்குகளை அடைய அது முற்படுகிறது. தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இதர கட்சிகளுடன் பேசாமல் தன்னுடன் மட்டும் பேச வைப்பதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் எகப்பிரதிநிதிகள் தாங்கள்தான் என்ற புலிகளின் ஜனநாயக மறுப்பு எதேச்சாதிகார நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். இது கூட்டமைப்பின் ஒரு இலக்கு.

அத்தோடு இதர கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும் மட்டும் பேசி ஒரு தீர்வு எட்டப்பட்டால், அதை ஏனைய கட்சிகள் - குறிப்பாக சிங்கள இனவாதக் கட்சிகள் - குழப்பியடிக்கும் என்பது கூட்டமைப்பின் இன்னொரு எதிர்பார்ப்பு. அப்படி எதுவும் நடக்காமல் (நடக்காமல் விடுவதற்குச் சாதியமில்லை) பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அதற்கான முழு உரிமையையும் புகழையும் தனதாக்கிக் கொள்ளலாம் என்ற அது அல்லது இது என்ற கபட நோக்கம் இன்னொரு திட்டம்.

அடுத்த இலக்கு பிச்சைக்காரன் தனது புண்ணை மாற்றாமல் வைத்து அதைக்காட்டியே வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுப்பது போல, இனப்பிரச்சினைத் தீர்வு எதுவும் எட்டப்படவிடாமல் இழுத்தடித்து அல்லது குழப்பியடித்து தொடர்ந்து அதில் அரசியல் குளிர்காய்வது. அவ்வாறான ஒரு நிலை இருந்தால் இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகிறாhகள், ஒடுக்குமுறைக்குள்ளாகிறார்கள் என சர்வதேச அரங்கில் ஒப்பாரி வைத்து அனுதாபம் தேட வசதியாக இருக்கும்.

இந்த யுக்தியையே கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக எல்லாப் பிரதான தமிழ்த் தலைமைகளும் செய்து வந்திருக்கின்றன. இப்பொழுது அதற்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது. புலிகள் வேகமாகவும் பலமாகவும் உருவாகி படிப்படியாக அழிந்து போனபின்னர், புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி மாபியாக்களே அந்த இயக்கத்தின் மிச்சசொச்ச நினைவுகளைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன காரணம் கொண்டும் அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகண்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய போக்குகளில் அவர்களது சட்டாம்பிள்ளைத்தனம் மிகவும் கனதியாக இருப்பதும் ஒரு காரணமாகும்.

எல்லாவற்றுக்கும் புலிகளின் உருவாக்கத்திலும் அவர்களின் வளர்ச்சியிலும் உள்நோக்கத்துடன் கூடிய மிகப்பெரிய பங்கு வகித்த சில ஏகாதிபத்திய சக்திகள், அவர்களது எதிர்பாராத அழிவுக்குப் பின்னர், இலங்கை அரசைப் பழிவாங்குவதிலும், தமக்குப் பிடிக்காத தற்போதைய இலங்கை அரசை மாற்றித் தமக்கு ஏதுவான ஒரு அரசை அங்கு உருவாக்குவதிலும் திட்டமிட்ட வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் எப்பொழுதுமே தமக்கு நம்பிக்கையான ஐ.தே.க தலைமையில் அரசுக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் திரட்டி வருகின்றனர். அந்த அணியில் தீவிர வலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவிலிருந்து - தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, சரத் பொன்சேகா, மனோ கணேசன் உள்பட - தீவிர இடதுசாரித்தனம் பேசும் விக்கிமபாகு கருணரத்தினவின் சிறு குழு வரை அனைவரையும் அணிதிரட்டி வருகின்றனர். அதன் வெளிப்பாடே இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க - தமிழ் கூட்டமைப்பின் 'கூட்டுக் கலியாண' மேதினக் கூட்டம்.

இதுதான் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலவரம். அதாவது அரசாங்கம் அமைக்கவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்ற மறுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தள்ளிப் போடுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிகழ்ச்சித் திட்டம். இனப்பிரச்சினைத் தீர்வைவிட, ஏகாதிபத்திய நலன்களுக்கான ஆட்சி மாற்றம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும் கூட கூட்டுச் சேர்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தயாராக உள்ளது.

1957இல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தையும், 1990இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையும், 2000இல் சந்திரிகா முன்வைத்த தீர்வுத் திட்டத்தையும் குழப்புவதற்கு அப்போதைய தமிழ்த் தலைமைகள் எப்படி ஐ.தே.கவுக்கு ஒத்துழைத்தனவோ, அதுபோலவே தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையும் நடந்து கொள்கிறது. அதற்கு ஒரு உதாரணம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது போர் வெறியனும் சிங்களப் பேரினவாதியுமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவை கூட்டமைப்பு வெளிப்படையாக ஆதரித்தமை. சமீபத்திய உதாரணம், உதைத்த காலை நக்குவது போல பேரினவாத ஐ.தே.கவுடன் இணைந்து தமிழர்களின் 'தாயக பூமி'யான யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மேதினக் கூட்டம் நடாத்தியமை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கபட நோக்கங்களையும், புலம்பெயர் புலிகளின் சதித் திட்டங்களையும் புரிந்து கொண்டபடியால்தான், அவர்களுக்கு உதவும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வராவிட்டால் தானும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம் பெறப்போவதில்லை என ஐ.தே.க சமீபத்தில் அறிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இன்றைய அரசாங்கம் மெத்தனப் போக்கையும், தேவையற்ற கால தாமதத்தையும் செய்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டை நாம் நேர்மையுடன் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகளின் பின்னணியில் ஐ.தே.க தலைமையுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வைக் குழப்புவதில் வகித்து வரும் பங்கு பாத்திரத்தைக் காணத்தவறுவோமாயின், இருட்டினில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடராகத்தான் இருப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com