Thursday, June 28, 2012

சிவசங்கர் மேனனின் இலங்கை வருகையும் போலி அரசியல் தஞ்சம் கோருவோரும். வர்ணகுலசூரிய

இந்திய வெளிநாட்டு அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை வருகின்ற நிலையில் அவருடை வருகைதொடர்பாக சிங்கள ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிகை யாளரான கீர்த்தி வர்ணகுலசூரியா இது தொடர்பில் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

28ம் திகதி இலங்கைக்கு வரும் இந்திய வெளிநாட்டுச் செயலாளர் சிவசங்கர் மேனன் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், மற்றும் 13 வது திருத்தத்தை வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தல், மற்றும் அமைச்சர் சம்பிக்கவின் முள்ளிவாய்க்கால் கதை தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் என்பவற்றுக்காகவே என்று தெரிகின்றது. அது இந்நாட்டின் உண்ணாட்டு விடயத்தில் கை வைக்கும் செயலாகும்.

தமிழ் நாட்டில் இலங்கைத் தேசிய கொடியை எரித்திருக்கிறார்கள். ஜனாதிபதியை இழிவுபடுத்தி யிருக்கிறார்கள். இந்திய அரசு அதற்கு வாய்மூடியிருந்தது. இலங்கையில் இப்படி ஏதாவது இந்தியாவுக்கு எதிராக நடந்திருந்தால் இந்திய தூதரகம் பார்த்துக் கொண்டிருந்திருக்குமா?

இலங்கைப் படையினருக்கு இந்தியாதான் பயிற்சிகளை வழங்கியது, ஆயுதங்களை வழங்கியது. இவற்றையெல்லாம் உள்நோக்கத்தோடுதான் இந்தியா செய்துள்ளது. கடந்த காலத்தில் இந்தியா தந்திரமாகச் செயல்படுத்தியவைகள் படிப்படியாகத் தெரியவருகின்றன. பிரபாகரனின் ஆதரவாளரான காசி ஆனந்தனின் கூற்றுக்கள் இவற்றை மெய்ப்படுத்துகின்றன. இவற்றை இலங்கை அரசு மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்கு இபோதுள்ள ஓரே பிரச்சினை வடக்கு-கிழக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்.

இந்த பின்னணியில், சிவசங்கர் மேனனின் இலங்கை வருகையின் பின்னர், அமெரிக்காவின் இலங்கைகான புதிய தூதுவர் மிச்செல் செசன் இவர் சென்னையில் அமெரிக்க கொன்சுலராக இருந்திருக்கிறார். அது போல் பதவி விலகிச் செல்லும் அமெரிக்க தூதுவர் பெட்ரீசியா புட்டேனிஸூம் பலநாடுகளின் உண்ணாட்டுப் பிரச்சினைகளில் தலையீடு செய்திருக்கின்றார். அவர் இங்கு வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகம் தொடர்புபட்ட USAID நிறுவனத்தின் இலங்கைச் சமூகம் முகம் கொடுக்கம் பொதுச் சவால்களை அடையாளம் கண்டு செயல்படும் அமைப்புகளுக்கு நிதிவழங்கும் பிரிவில் இருந்திருக்கிறார். மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக செயற்பாடுகளுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு இந்த நிறுவனம் நிதி வழங்குகின்றது. அவ்வாறாயின் இலங்கையில் அது எவ்வாறு நடந்து கொள்கிறது? புடேனிஸ் இலங்கைப் படைத்தரப்பைப் பற்றி விமர்சிப்பவர்களிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்த்க்கது.

இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது ஐக்கியப்பட்டுள்ளன. தமிழ் கூட்டணி இந்திய சார்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் கூறுகின்றார்கள். இவரகள் சற்றேனும் புலிகளுக்கு எதிராக போர் செய்ய வேண்டும் என்று கூறியதில்லை. புலி அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், புகலிடத் தமிழர் சக்தியுடன் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று. அதற்கு ஏதுவாக முதுகெலும்பு இல்லாத பாதுகாப்புச் செயலாளர் ஒருவரை நியமிக்கப் பார்க்கிறார்கள். அப்போது வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றி விடலாம், அரச சார்பற்ற அமைப்புகள் தமது விருப்பப்படி செயல்படலாம். அத்துடன் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை தமிழ்க் கூட்டணிக்குக் கொடுத்துவிடலாம் என கனவு காண்கின்றனர்.

புலிகளின் ஆயுதங்கள் வடக்கில் எவ்வளவு மறைத்து வைக்கப்படிருக்கின்றன என்று இராணுவத்துக்குத் தெரியாது. புனர்வாவு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அதனை அறிவார்கள். புலிப் பயங்கரவாதிகளின் தலைவி தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இலங்கைக்கு வந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி வடக்கிற்குப் போய் வந்த பின்னர் இராணுவம் அம்மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாதென்று கூறியிருந்தார். தமிழர் கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீதரனின் சகோதரன் நடாத்தும் ஐரோப்பிய புலி இணைதளத்தில், சிவசங்கர் மேனனிடம் தமழர் கூட்டணி, இராணுவம் வடக்கில் மக்களின் காணிகளை அபகரித்தாகப் புகார் செய்யப் போவதாக்ச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதல்லவா?

இங்கு வரும் புதிய அமெரிக்க தூதுவர் பயங்கரமானவர். அவர் லெபனானில் உண்ணாட்டு விடயங்களில் தலையிட்டதாகவும் அந்த நாட்டில் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் தலையீடு செய்ததாகவும் விக்கி லீகஸ் குறிப்பிடுகின்றது. அமைச்சரவையை நியமிப்பதிலும் அவர் தலையிட்டுள்ளார். இந்தப் பின்புலத்தில் ஐரோப்பாவில் உள்ள இலங்கைத் துதுவர் ஒருவர் கூறுகிறார், முதலில் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடர்ந்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று. ஆனால், தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தது புலிகளைத் தோற்கடிப்பதற்கே. மாறாக, இப்படியான தூதுவர்களின் ஆசையை நிறைவேற்ற அல்ல.

இந்த நிலைமையில் வடக்கில் தமிழரை வெளிநாட்டுக்கு ஒடிப் போகச் செய்வதற்காக போலி இராணுவ முகாம் கடிதத் தலைப்பில் கடிதம் வழங்கும் தொழில் நடைபெறுகின்றது. வவுனியாவில் ஜோசப் முகாம் இல்லாத நிலையில் அது இருப்பதாக காட்டும் போலி கடிதத் தலைப்பில் ஜோசப் முகாமில் விசாரணைக்கு அழைப்பதாக தமிழர்களுக்கு கடிதம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். இதன் ஒரு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் பிரபல வியாபாரி ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் சொந்த பிள்ளையின் வீசாவை நீடிப்பதற்காக இராணுவத்தினர் அச்சமூட்டுகின்றனர் என்று காட்டுவதற்காக நகர பிதாவின் கடிதம் பெற முயன்றதை பாதுகாப்பு அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

பின்னர் அவர் கிராம சேவகரிடம் கடிதம் பெற்றுள்ளார். இது அரசியல் தஞ்சம் கோருவோரின் செயல் என்பது உறுதியாகின்றது. அண்மையில் கொழும்பில் கண்ணாஸ்பத்திரிக்கு அண்மையில் தொப்பி போட்ட ஒருவரைக் காண முடிந்தது. புகைப்படக் கலைஞரான அவர் சிலகாலத்துக்கு முன்னர் தனக்கு அரசினால் மரண அச்சுறுத்தல் இருக்கின்றதென கூறி வெளிநாட்டுக்கு ஓடியவராவார். அவ்வாறானால் அவர் எப்படி மீண்டும் இந்த நாட்டுக்கு வந்திருக்க முடியும். இவ்வாறான போலி அரசியல் தஞ்சக்காரர்களின் முகத்திரை கிழியும் வேளையில் தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இந்த நாட்டுக்கு வருகிறார்.

No comments:

Post a Comment