Tuesday, June 26, 2012

வீட்டு பணிப்பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு

வீட்டு பணிப்பெண்களுக்கு வெளிநாடு களில் கூடுதலான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதற்கமைய சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார தெரிவித்தார்.

இலங்கை பணிப்பெண்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக, சிங்கப்பூர் கவனம் செலுத்தியுள்ளதாகவும், சிங்கப்பூர் தொழில் முகவராண்மை சம்மேளனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கிடையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும், பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள 7 தொழில் நிறுவனங்கள் தற்போது இவை தொடர்பாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வருகை தரும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததை தொடர்ந்து, இதற்கான சந்தர்ப்பங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அமல் சேனாலங்காதிகார சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு பணிப்பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பாகவும், பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், சம்பளத்தை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com