வெளிநாடுகளுக்கு தப்பியோடிய புலிகளாலும் மேற்குலக நாட்டவர்களினாலும் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவர்களின் நிழல்கள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவி பிரிவினைவாதத்திற்கு நாட்டை நகர்த்தி செல்கின்றனர் எனவும் அமைச்சர் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் மையப் பகுதியை நோக்கி பிரிவினைவாத சக்திகளால் பிரயோகிக்கப்படும் சவால்களை ௭திர்கொள்ள பொதுமக்களின் ஆதரவு அரசிற்கு அத்தியாவசியமானதாகும். எனவே பேதமின்றி அரசுக்கு ஆதரவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய சர்வதேச புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முகம் கொடுக்கும் வகையில் மத்திய வங்கி உசார் நிலையில் இருக்க வேண்டும். டுவிட்டர், பேஸ்புக் ஊடாகவும் நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன ௭ன்றும் அமைச்சர் வீரவங்ச குறிப்பிட்டார்.
”வெனிசுலாவின் கிளர்ச்சியினை புரிந்து கொள்வோம்” என்ற நூல் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் (01) வெளியீடு கண்டது. இதில் விஷேட உரையாற்றியபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
பூகோளவியல் ரீதியில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு தூரத்தில் காணப்பட்டாலும் அரசியல் ரீதியில் மிக நெருங்கிய நிலையிலேயே உள்ளது. ஆனால் அந்த நாடுகள் மேற்குலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு ஒன்றிணைந்து போராடி வருகின்றன. குறிப்பாக வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
இதேநிலையே இன்று இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை பல்வேறு நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகளே இன்று காணப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் பல தரப்புக்களை ஒற்றர்களாகவும் பொருளாதார சதிகாரர்களாகவும் மேற்குலக சக்திகள் பயன்படுத்துகின்றன.
சிறையிலிருந்து விடுதலையான சரத் பொன்சேகா சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ௭ன்று கூறுகின்றார். இது யாருடைய தேவையாக இருக்க முடியும். சம்பந்தனுடன் கூட்டணியமைத்து கொண்டு இலங்கை தமிழனின் நாடு என்கிறார். இராணுவத்தில் இருந்தபோது இது சிங்கள வர்களின் நாடு என்கிறார். இவர்களைப் போன்றவர்களை மேற்குலக சக்திகள் நாட்டிற்கு ௭திராக பயன்படுத்துகின்றன.
ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாத ரூபாவின் பெறுமதி தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது ௭ன்றால் இதன் பின்னணியில் நாட்டிற்கு ௭திராக சக்திகள் உள்ளமை வெளிப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா, எயார் லங்கா போன்ற துறைகளை பாதுகாத்து பல கோடி ரூபா செலவிடும் அரசால் ரூபாவை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை ௭ன்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே நாட்டிற்குள் ஊடுருவியுள்ள அந்நிய சக்திகள் பல்வேறு துறைகளிலும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களே இன்று ௭திர்க்கட்சியைப் போன்று கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆகவே நாடு ௭திர்கொண்டுள்ள பல்துறைசார் சவால்களை தோல்வியடையச் செய்ய பொதுமக்கள் அரசுடன் ஒன்றிணைய வேண்டும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment