தெற்கின் நலனுக்கு வேண்டி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வேலைகளை தியாகம் செய்வதில் நியாயம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், பெரும்பாலான படை வீரர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் பொருளாதார தாக்கத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. நீண்ட பல வருடங்களாக நடைபெற்று வந்த யுத்தத்தினால் அவர்களது சம்பளங்கள் தெற்கின் பொருளாதாரத்துக்கு முட்டுக்கொடுத்து வந்துள்ளன.
போராடுவதற்கு யுத்தம் ஒன்று இல்லாதபோது பாதுகாப்பு படைகள் என்ன செய்ய வேண்டும்? எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்து, அது மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பில்லை என்று அனைவரிடத்தும் நம்பகத்தன்மையை நல்லபடி ஏற்படுத்தி, இப்போது மூன்று வருடங்கள் கடந்து சென்றபின்னர், கேட்பதற்கு ஏற்றதான ஒரு கேள்வியாக இது தோன்றுகிறது. நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். புதிதாகத் தோன்றக்கூடிய எந்தவிதமான போர்க்குணத்தையும் எதிர்கொள்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பாதுகாப்பு படைகள் நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். எனினும் 2009 வரை அவர்களைப் பிடித்து வைத்திருந்;த போருடன் ஒப்பு நோக்கும்போது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பணி மட்டுமே. எனவே இனி என்ன?
கடந்த வாரம் டெய்லி நியுஸ் பத்திரிகையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர், இடைத்தரகர்களின் சுரண்டல் இடம்பெறுவதை நீக்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்வனவு செய்ய ஆரம்பத்திருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. நெல்லை சுத்தமாக்கி அரிசியை பெறும் பணியில் படை வீரர்கள் சுழற்சி முறையில் வேலை செய்வதாகவும், மற்றும் தெகியத்தக்கண்டியவில் உள்ள மிகப்பெரிய நெல் உற்பத்திச் செயலாக்கத் தொகுதியை அவர்கள் புதுப்பித்து வருவதால், வெகு விரைவிலேயே மாதாந்தம் 1,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான முழு அரிசித் தேவையையும் வழங்கக்கூடிய ஒரு நிலைக்கு அவர்கள் வரக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல வருடப் போராட்டங்களின் பின்னர் விவசாயிகள் தங்கள் அறுவடைக்கேற்ற நியாயமான விலையை பெற்று வருகிறார்கள்.
இப்போது இராணுவத்தினர் பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவடையச் செய்யப் போவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து 10,000 பசுக்களை இறக்குமதி செய்து, பொலன்னறுவ மாவட்டத்தில் உள்ள தமது பண்ணைகளில் இராணுவத்தினர் அவற்றை வளர்க்கப்போவதால், ஊட்டச் சத்தின்மை என்பது ஒரு கடந்தகால விடயமாக மாறப்போகிறது.
சில வழிகளில் இது ஒரு நல்ல செய்தி. நிச்சயமாக இவைகள் பயனுள்ள நோக்கங்கள். மேலும் படை வீரர்களை எதுவும் செய்யாமல் வெறுமனே உட்கார்த்தி வைப்பது வளங்களை வீணடிக்கும் ஒரு செயலாகும். இராணுவத்தில் மட்டுமே சுமார் 200,000 அங்கத்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச தரங்களுடன் முழுமையான வகையில் பார்த்தால் இது பெரிய அளவுதான்.
2012 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செலவினங்கள் அரசாங்க செலவில் மிகப் பெரிய அளவான 20 விகிதத்தை எடுத்துள்ளன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 4 விகிதத்தை கொண்டுள்ளது. அதேவேளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இது 2.7 விகிதமாகவும், சீனாவில் 2.1 விகிதமாகவும் உள்ளன. முழு உலகத்தையும் ஆட்சிபுரியும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அமெரிக்காகூட தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 விகிதத்தைதான் பாதுகாப்புக்காக செலவிடுகிறது. அது தனது உள்நாட்டு உற்பத்தியில் பெருமளவு தங்கியிருப்பதை கவனத்தில் கொள்ளும்போது, இது அவ்வளவுக்கு பலனற்ற ஒன்றாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா தனது பாதுகாப்பு தேவைகளுக்கான பொருட்களை இறக்குமதியே செய்கிறது.
மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இந்த எண்ணிக்கைகளில் கடந்த வருடங்களை விட ஒரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்கள் கடந்த ஒக்டோபர் மாதம் பிரசுரமாகியபோது தரப்பட்ட விளக்கம் - எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இடங்களில் புதிய தளங்களை கட்டுவதற்காகவும், அதேபோல போரின்போது உபகரணங்களை வாங்குவதற்காக பெறப்பட்ட கடனை திருப்பிச்; செலுத்தவும் இந்தப் பணம் தேவைப்படுகிறது – என்கிற அந்த செய்தி தவறாக வழிநடத்தப்படுவதாக உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூபா 231 பில்லியனில் சம்பளம் மற்றும் படிகளுக்காக ரூபா 162 பில்லியன் செலவிடப்பட்டு வருவதனாலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா, பாதுகாப்பு படை வீரர்களுக்காக மிக அதிக அளவில் செலவிடவேண்டி உள்ளது, ஏனெனில் அவர்கள் மிக அதிகமானவர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளார்கள்.
பாதுகாப்பு படையினரை குறைப்பது என்பது சர்ச்சைக்குரிய விடயம், என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. குறிப்பிடத் தக்க விடயமாக நாட்டுக்காக அவர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து போராடியிருப்பதால், நட்ட ஈடுகளை வழங்கியும் கூட, அவர்களை அவர்களின் பணிகளிலிருந்து தூக்கியெறிவது, அரசாங்கத்தின் நற்பண்புகளுக்கு பொருத்தமான ஒன்றல்ல.
எனினும் இது ஒரு சிக்கலான விடயமாக இருப்பதால் இதை கையாளப்படாமல் விட்டுவிடவேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. பொதுமக்கள் செய்யவேண்டிய வேலைகளை இராணுவத்தினரைக் கொண்டு செய்விப்பதும் அதற்கான தீர்வுமல்ல – எல்லாவற்றையும் விட இவைகள் மற்றவர்களின் வேலைகள்.
தவிரவும் கொழும்பில் தேங்கியிருந்த குப்பைகள் விடயத்தை போன்ற ஒன்றுதான் இது, அந்தப் பிரச்சினை கோத்தபாயா ராஜபக்ஸ நகர அபிவிருத்தி அதிகார சபையினை பொறுப்பேற்றதும் வெளிப்படையாக தீர்க்கப்பட்டது. நகரின் ஒவ்வொரு மூலையிலும் மெதுவாக மற்றும் அழுகி துர்நாற்றமெடுக்கும் குப்பைக்குவியல் வருடக்கணக்காக கிடந்து நாறியதால் நகரம் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியிருந்தது, அது அகற்றப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அது சுகாதாரத்துக்கு கேடானதும் அதேபோல மூக்கு மற்றும் கண்நோவு ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அவர் பொறுப்பேற்று சில மாதங்களுக்குள் எல்லாமே மாற்றம் பெற்றது. திடீரென வீதிகள் யாவும் சீராகின. எனினும் இதில் மந்திர தந்திரம் எதுவம் இடம்பெற்றிருக்கவில்லை. அரசியல் விருப்பம் ஒன்றே அதற்கு அவசியமானதாக இருந்தது. குப்பை அள்ளுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்களை குப்பைகளை அள்ளாமல் செல்லும்படி அனுமதித்தவர்களிடம், அவர்களது நடவடிக்கைகள் இனிமேலும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனச் சொல்லப்பட்டது. இலஞ்சம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த அணுகுமுறைக்காக பாராட்டப்பட வேண்டியவர் கோத்தபாயா ராஜபக்ஸதான் என்றாலும் முழு நாட்டிலுமுள்ள 20 மில்லியன் மக்களால் மிகவும் இலகுவாக செய்யக்கூடியதாக இருந்த இந்த சிறிய ஒரு வேலையை ஒரே ஒருத்தர்தான் செய்து முடித்தார், என்று பரிந்துரைப்பது மிக மோசமான ஒன்று. அதி நவீன பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதை போன்ற ஒரு விடயமல்ல இது.
பாதுகாப்பு அமைச்சகத்துடன் நகர அபிவிருத்தியையும் ஒன்றாக கொண்ட உலகத்திலுள்ள ஒரே ஒரு நாடு ஸ்ரீலங்கா மட்டுமே. அவை இரண்;டினதும் முக்கிய நோக்கங்களுள் நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஈர நிலங்களை பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் இடம்பெற்றுள்ளன. இதற்கு தொடர்பில்லாத இன்னும் எத்தனை விடயங்கள் இதனுடன் இணைக்கப்பட உள்ளன?
யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து நெல் கொள்வனவு, மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் காய்கறிகளை சந்தைப்படுத்தும் பணியிலும் இறங்கியுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் அவர்கள் தேனீர் கடைகளையும் உணவு விடுதிகளையும் நடத்தி வருகிறார்கள். மற்றும் சமிபத்தில் கடற்படையினர் மிரிஸ்ஸ பகுதியில் தாங்கள் ஒரு ஹோட்டலை நிர்மாணித்து வருவதாக அறிவித்துள்ளார்கள்.
பாதுகாப்பு அமைச்சு இந்தப் பணிகள் யாவற்றையும் கையாள முடியும் மற்றும் வழமையாக இந்தப் பணிகளைச் செய்பவர்களைக் காட்டிலும் படை வீரர்களுக்கு இவற்றுக்காக அதிக சம்பளம் வழங்கப்படலாம். மேலும் முற்றிலும் மாறுபாடான ஒன்றுக்காக அதிக பொருட்செலவில் அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சகம் சம்பந்தமான விடயங்களில் அழுத்தம் கொடுப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என விவாதிப்பது பொருத்தமற்றது ஏனெனில் மிகவும் நன்றாக செயற்படும் அமைச்சு அது ஒன்றுதான். அது உண்மையாக இருந்தாலும்கூட – அது சாத்தியமானது போலத் தெரிகிறது - இது ஒரு சமீப கால நிகழ்வாகவே இருக்க முடியும். எல்லாவற்றிலும் மேலாக யுத்தமானது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இழுபட்டிருந்தது, அப்போது அது தொடர்பான எதனையும் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு சக்தியற்ற ஒன்றாகவே இருந்தது என்பது வெளிப்படை. மற்றைய திணைக்களங்களையும் கூட மறுசீரமைக்க வேண்டும்.
தான் பதவியேற்ற காலம் முதற்கொண்டு மகிந்த ராஜபக்ஸ விவசாயத் துறையில் அரை மனதுடனேயே தலையீடு செய்து வருகிறார், அதிக சொல்லாட்சி வளம் இருந்தாலும்கூட அவர் தனக்கு முன்பு பதவி வகித்தவர்களைக் காட்டிலும் சிறிதளவு மேல் நடவடிக்கைகளையே எடுத்து வருகிறார். நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும், காய்கறி மற்றும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் சந்தைப்படுத்தும் சிக்கல்கள் தீரவேண்டும் என்பனவற்றை தீர்ப்பதை அவர் உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருந்தால் இதை நடைமுறைப்படுத்த அதற்காக ஒரு விவசாய அமைச்சு அவரிடம் உள்ளது. அது 2012 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பெறும் பணத்தில் சிறிய பின்னத்தின் அளவான வெறும் 6 பில்லியன் ரூபாக்களையே பெற்றுள்ளது. அதில் சம்பளம் மற்றும் படிகளுக்காக 2 பில்லியனிலும் குறைவான தொகையை செலவிடவேண்டியுள்ளது. அதற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் அது திறம்படச் செயலாற்றியிருக்கும். அதன் ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக அதிகரித்தால்கூட அது அரசாங்க செலவினங்களில் பரிதாபகரமான வெறும் ஒரு விகிதமாகவே இருந்திருக்கும். மற்றும் அங்கு ஒரு தலைமைத்துவ மாற்றம் தேவைப்பட்டிருந்தால், மகிந்த ராஜபக்ஸ அதைச் செய்வதை எதுவும் தடுத்து நிறுத்தியிருக்காது. விவசாயத்துறையில் சிறிதளவு அரசியல் விருப்பம் செலுத்தப்பட்டிருந்தால், நாடு பெரியளவு உருமாற்றம் பெற்றிருக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், அங்குதான் முன்னேற்றமடையாத முக்கிய பகுதிகள் அதிகம் உள்ளன.
மிகவும் உற்பத்தி திறன் கொண்ட நோக்கங்களுக்காக வளங்கள் திசை திருப்பப் பட்டு வருவதினால், போரின் முடிவு அத்தகைய மாற்றங்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு அமைச்சு மட்டுமே செயற்படுமாகவிருந்தால், இந்த நடைமுறை நல்ல வகையில் நிறைவினை எட்டப் போவதில்லை. இதற்கு வேறு பல நிபுணத்துவங்கள் மற்றும் பிற செயல்முறைகள் தேவையாக உள்ளன.
மேலும் பாதுகாப்பு படையினர் தங்கள் செயற்படும், அரசு தொடர்பான அநேக செயற்பாடுகளில், முக்கியமாக ஒரு - இன கருத்தினை கையாள்வதால், அது பாகுபாடு உள்ளதாக மேல் விளக்கமளிக்கிறது. அது அந்தக் கருத்தினை நோக்கமாக கொண்டிருந்ததா இல்லையா என்பது ஒரு பிரச்சினையாக இல்லை.
தங்கள் சமூகத்தின் ஏதாவது அம்சங்களை, உண்மையிலேயே அதற்கு அவசியம் இல்லாமலிருந்தாலும், நிச்சயமாக படை வீரர்கள்தான் அதைச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்காவாசிகள் உண்மையிலேயே விரும்புகிறார்களா?
படை வீரர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைப்பு செய்யவேண்டிய அவசியத்திலிருந்து தப்ப முடியாது என்று நன்கு தெரிகிறது. அதேவேளை அத்தகைய தீர்மானங்களை பாதுகாப்பு படையினரின் கைகளிலேயே விட்டுவிடவேண்டும், என வாதிப்பதற்கு ஆவலாகவும் இருக்கிறது. ஏனெனில் எது தேவையானது என்பதை சந்தேகமின்றி அவர்கள் நன்கறிவார்கள், தங்கள் சொந்த அதிகாரத்தை குறைப்பதற்கு எவரும் விரும்பமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும் வேண்டும். சரத் பொன்சேகா இராணுவத்துக்கு பொறுப்பாக இருந்தபோது, தனது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதில் அதிக ஆர்வமாக இருந்தார், போர் முடிவடைந்ததும், இராணுவத்தின் அங்கத்தினர்களை இரட்டிப்பாக அதிகரிக்கும் நோக்கத்தில், உண்மையில் ஆட்சேர்ப்பினை முடுக்கி விடும்படி முன்மொழிந்தார். அவருடைய முன்னாள் சகாக்கள் சந்தேகமின்றி தங்கள் அணுகுமுறையில் மிகவும் அளவீடு உள்ளவர்களாக இருந்தனர், ஆனால் இறுதி முடிவு நிச்சயமாக அரசியல்வாதிகளிடமே இருந்தது, அவர்களின் தீர்மானங்களுக்கு பரந்தளவு காரணிகளின் செல்வாக்கு செலுத்தின.
தெற்கின் நலனுக்கு வேண்டி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வேலைகளை தியாகம் செய்வதில் நியாயம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், பெரும்பாலான படை வீரர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் பொருளாதார தாக்கத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. நீண்ட பல வருடங்களாக நடைபெற்று வந்த யுத்தத்தினால் அவர்களது சம்பளங்கள் தெற்கின் பொருளாதாரத்துக்கு முட்டுக்கொடுத்து வந்துள்ளன.
இன்னும் மிகவும் முக்கியமானதாக, கருணா குழுவை சேர்ந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் ஒருங்கிணைப்பு விடயத்தில் அந்த நடவடிக்கை இன்னும் சிறப்பான வழியில் கையாளப்பட வேண்டும், அவர்களில் பலர், கிழக்கு மாகாணத்திலும் மற்றும் வேறு இடங்களிலும்; வெறிகொண்ட விதமாக இயங்கி வருகிறார்கள். படைகளின் தேவைக்காக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், அவர்களின் தேவை இனிமேலும் அவசியப்படாத இடத்தில் வேறு ஏதாவது ஒன்றை செய்வதற்காக பயிற்றப்பட வேண்டும். அவர்களுக்கு புதிய தொழில்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியே தங்கள் பழைய திறன்களை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான அரசியல் விருப்பங்களும் தேவை. இது, யுத்தத்தின் இறுதிவரை போராடிய எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் விடயத்தில்,ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தெளிவான அவதானிப்பு ஆகும், ஆனால் போராட்டத்தை முன்பே கைவிட்டவர்களுக்கு இது பொருந்தாது. பிரபாகரனை நசுக்குவதற்காக அவர்கள் செய்த உதவிக்கான கைமாறாக, அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயில் இருந்த காலத்தில் புரிந்த குற்றச்செயல்களுக்காக அவர்கள் மீது வழக்கு தொடுப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பலருடைய விஷயத்தில் அதிர்ச்சி உண்டாக்கும் விடயமாக இது உள்ளது. போர் முடிந்த மூன்று வருடங்களின் பின்னர் அவர்கள் செய்து கொண்டிருக்கும் குற்றங்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அரசாங்கம் தனது சொந்த வசதிக்காக இந்த நாட்களில் பல விடயங்களை பொறுத்துக்கொண்டு வருகிறது.
படை வீரர்களுக்கான நன்றிக்கடனும் ஒரு அளவுவரை மட்டுமே போக முடியும். அவர்களின் தேவைகளுக்கான முறையான மதிப்பீடு ஒன்றும் தேவை, மற்றும் நாடு இப்போது சமாதானமாக உள்ளது என்கிற உண்மையை பிரதிபலிக்கும் யதார்த்தமான மாற்றத்தையும் அணுக வேண்டும். இல்லாவிட்டால் வரும் வருடங்களில் அதன் பின்விளைவுகளுக்கு ஸ்ரீலங்கா முகம் கொடுக்கவேண்டி ஏற்படும்.
பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் பாதுகாப்பு படையினர்கள் தங்கள் நேரம் முழுவதையும் கோப்பைகளில் தேனீர் தயாரிப்பதிலேயே செலவிட்டால், யுத்தத்தில் சண்டையிடுவது எப்படி என்பதை அவர்கள் நிச்சயம் மறந்து விடுவார்கள்.
தமிழில் எஸ் குமார்
நன்றி தேனீ
No comments:
Post a Comment