Friday, June 15, 2012

அபராதம் செலுத்த தவறிய சீன பெண்ணின் சிசுவை கொன்ற சீன சுகாதார அதிகாரிகள்.

உலகிலேயே சீனாவில் அதிக சனத்தொகை உள்ளதால் அந்நாட்டில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி பெற்றுக் கொண்டால் கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, சீனாவில் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள அபராதம் செலுத்தாத காரணத்தால் இளம் பெண்ணுக்கு ஏழாவது மாதத்தில் அரசு அதிகாரிகள் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தெரியவருவதாவது, சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர் பெங் ஜியாமி. முதல் குழந்தை உள்ள நிலையில் இந்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உருவானது. இதை கேள்விப்பட்ட சுகாதார அதிகாரிகள் அவரை அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.

ஆனால், பெங்கின் கணவர் இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்பட்டு 85 லட்ச ரூபாவை அபராதம் செலுத்த ஒத்துக் கொண்டார். ஆனால் உரிய காலத்தில் அவர் இந்த அபராதத்தை கட்டாத காரணத்தால் உள்ளுர் சுகாதார அதிகாரிகள் பெங்கை வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று, அங்கு அவருக்கு பிரசவ ஊசி போட்டு ஏழு மாத சிசுவை வெளியே எடுத்தது மாத்திரமல்லாமல், அந்த சிசுவின் தலையில் ஊசி போட்டு கொன்று விட்டனர்.

இந்த சம்பவத்துக்கு சீன மனித உரிமை இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் வெளிநாட்டு மனித உரிமை அமைப்பினர் குறிப்பிடுகையில் 'ஹிட்லர் காலத்தில் கூட இது போன்ற சம்பவம் நடந்ததில்லை' என்றனர்

No comments:

Post a Comment