Monday, June 18, 2012

கார் ஓட்டும் உரிமை அளிக்க கோரி சவுதி மன்னருக்கு 600 பெண்கள் மனு.

சவுதியில் கார் ஓட்டுவதற்கு உரிமை அளிக்க கோரி, 600க்கும் அதிகமான பெண்கள், மன்னர் அப்துல்லா பின்அப்துல் ஆசிசுக்கு மனு அளிக்க உள்ளனர். சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை, கார் ஓட்டும் உரிமை இல்லை. இதை எதிர்த்து சவுதி பெண்கள், கடந்த ஆண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கார் ஓட்டுவதற்கு பெண்களுக்கும் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மனால் அல்ஷெரீப் என்ற இளம்பெண் கடந்த ஆண்டு, கார் ஓட்டும் உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்று வலியுறுத்தி, இன்டர்நெட்டில் பிரசாரம் தொடங்கினார். இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு காணப்பட்டது.

அதன் முதலாண்டு நிறைவை அடுத்து 600க்கும் அதிகமான பெண்கள், கார் ஓட்டும் உரிமை கோரி மன்னர் அப்துல்லா பின்அப்துல் ஆசிசிடம் மனு அளிக்க உள்ளனர். அனைவரும் கையெழுத்திட்ட மனு நாளை மன்னரிடம் அளிக்கப்பட உள்ளது. இந்த மனுவில், சவுதி அரேபியாவில் டிரைவிங் பயிற்சி பள்ளிகள் தொடங்க வேண்டும். வருங்காலத்தில் பயிற்சி பள்ளிகள் மூலம் பெண்களுக்கு லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், வரும் 2015ம் ஆண்டில் சவுதியில் நடக்க உள்ள நகராட்சி தேர்தலில் பெண்கள் ஓட்டளிக்கலாம் என்று மன்னர் அறிவித்துள்ளதற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனால் கூறுகையில், சட்டத்தை மீற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. உலக நாடுகளில் உள்ள பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை உள்ளது. அந்த உரிமை எங்களுக்கும் வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com