Saturday, June 23, 2012

நித்யானந்தர், ரஞ்சிதா ‌மீது 5 ‌பி‌ரி‌வி‌ல் வழக்குப் பதிவு

மதுரை ஆதீன மடத்தில் புலித் தோல், யானைத் தந்தம் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நித்யானந்தர், நடிகை ரஞ்சிதா, மதுரை ஆதீன மடம் பணியாளர் வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது மதுரை மாநகரப் போலீசா‌ர் 5 ‌பி‌ரிவுக‌ளி‌ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆதீன மடம் மீட்புக் குழு எனும் அமைப்பின்கீழ் எதிர்ப்பாளர்கள் போராடி வருகின்றனர். மீட்புக் குழு சார்பில் ஆதீன மடத்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் நெறிமுறைகள் மீறி பூஜை எனும் பெயரில் நடனங்கள் நடப்பதாகவும், புலி, யானைத் தந்தங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சோலைக்கண்ணன் புகார் கூறியிருந்தார்.

இப் புகாரின் மீது மதுரை விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நே‌ற்று நடைபெற்றது.

அப்போது காவல் துறை சார்பில், சோலைக்கண்ணன் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் மனுவானது பைசல் செய்யப்பட்டது.

சோலைக்கண்ணன் கொடுத்த புகாரில், ஆதீனமடத்தில் புலித் தோல், யானைத் தந்தம் இருப்பதாகக் கூறியதை அடுத்து, வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி முதல்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து நித்யானந்தர், நடிகை ரஞ்சிதா மற்றும் மடத்தின் பணியாளர் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தெரிவித்தார்.

மேலும், மடத்தின் பூஜையின்போது நடைபெற்ற நெறிமுறை மீறல்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, மடத்தில் எந்த நேரமும் காவல் துறையினர் சோதனையிடலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment