Saturday, June 2, 2012

சட்டத்தில் திருத்தம். சந்தேகநபர்களை 48 மணித்தியாலயங்கள் தடுத்து வைக்க முடியும்.

கைது செய்யப்படும் சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்குமுன் 48 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரமளிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைக் கோவையில் திருத்தம் செய்வதற்கு நீதியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது 24 மணித்தியாலங்கள் வரையே இவ்வாறு தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கான விசேட பட்டியலொன்றையும் இத்திருத்தம் கொண்டிருக்கும். நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அமைச்சின் உயர்மட்ட வட்டாரங்கள்தெரிவித்தன.

இச்சட்டத் திருத்தத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் சட்டத்தரணிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்..

பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கு இத்திருத்தம் வழிவகுக்கலாம் என ஊடகமொன்று சுட்டிக்காட்டியபோது. "இத்திருத்தம் கொண்டுவரப்படாமல் தற்போதுள்ளதைப்போன்று சட்டம் இருந்தாலும் சித்திரவதையை நிறுத்த முடியாது. சந்தேக நபர்களினதும் சட்டத்தரணிகளினதும் உரிமையை பாதுகாப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும், தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சட்டத்தரணிகள் நேரடியாக சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார்" என விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com